ஸ்டாலின் தி.மு.க தலைவரா... கட்டப்பஞ்சாயத்து தலைவரா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி | Stalin is dmk leader or not? cm edappadi palanisami rises question

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:56 (06/04/2019)

ஸ்டாலின் தி.மு.க தலைவரா... கட்டப்பஞ்சாயத்து தலைவரா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

'ஸ்டாலின் தி.மு.க தலைவரா... கட்டப்பஞ்சாயத்து தலைவரா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க-வினரிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்' என தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி, தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் மாவட்டத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

முதல்வர்

அப்போது அவர், மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம்கொண்ட ஆட்சி அமைந்தால்தான், நம் தேவைகளை கேட்டுப் பெற முடியும். அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி, மக்களுக்கு சேவை செய்வதற்கான கூட்டணி. தி.மு.க அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத, சுயநலவாத கூட்டணி. அவர்களுக்கு கொள்கை இல்லை. நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத கூட்டணி அது. 15 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கேற்ற தி.மு.க, தமிழ்நாட்டு நலனுக்காக என்ன செய்தது? ஆனால், தி.மு.க குடும்பம் நன்றாக வளர்ந்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்யும் அளவுக்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க கட்சியினர்.

முதல்வர்

லட்சக்கணக்கில் ஊழல் செய்யவே அவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், ஒருபோதும் அது நடக்காது. ஆட்சிக்கு வந்தால் உங்கள் இடத்தை எல்லாம் பட்டா போட்டுவிடுவார்கள். பொய் பேசியே மக்களை நம்ப வைத்துவிடுவார்கள். பொய் பேசுவதில் தி.மு.க போன்ற வல்லமை யாருக்கும் இல்லை. அவர்களிடம் உஷாராக இருங்கள்.

முதல்வர்

பல விருதுகளை வாங்கியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அ.தி.மு.க ஆட்சியில் சாதி, மத மோதல்களோ, கலவரமோ ஏற்பட்டதில்லை. இதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், இதுவரை தமிழ்நாட்டில் 35,000 போராட்டங்கள் நடந்துள்ளன. ஆட்சியைக் கலைக்க எவ்வளவோ முயற்சி எடுத்துவருகிறார். எல்லாவற்றையும் கடந்து ஆட்சி நடத்தி வருகிறோம். எல்லோரும் நன்றாகச் சாப்பிட வேண்டும். அது மிக முக்கியம். ஹோட்டலில் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால், தி.மு.க-வினர், பணம் தராமல் அவர்களையே தாக்குகிறார்கள். ஆட்சியில் இல்லாதபோதே இப்படிச் செய்பவர்களின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால், மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா என்பதைச் சிந்திக்க வேண்டும். தி.மு.க-வின் பாரம்பரியம் என்ன? ஆனால் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். ஸ்டாலின் தி.மு.க தலைவரா... இல்லை கட்டப்பஞ்சாயத்து தலைவரா?

முதல்வர்

நாம் இதுவரை மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களையும், மக்களுக்கான தேவைகளையும் கூறி வாக்கு சேகரித்துவருகிறோம். ஆனால் ஸ்டாலின், என்னைப் பற்றியும் அமைச்சர்களைப் பற்றியும் குறை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறார். தி.மு.க பேசுவது எல்லாம் பொய். அவர்கள் தேர்தல் அறிக்கையில் இருப்பதும் பொய். இப்போது ஸ்டாலின் புதிதாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதை பேசி வருகிறார். நீதியை நிலைநாட்டும் வகையில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.