`ஆஸ்திரேலியா ஆப்பிள் தோட்டத்தில் வேலை; 90,000 சம்பளம்!'- வாலிபர்களிடம் ஏமாந்த மளிகைக் கடைக்காரர் | Aquiest arrested regarding money cheating

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (05/04/2019)

`ஆஸ்திரேலியா ஆப்பிள் தோட்டத்தில் வேலை; 90,000 சம்பளம்!'- வாலிபர்களிடம் ஏமாந்த மளிகைக் கடைக்காரர்

ஆஸ்திரேலியா ஆப்பிள் தோட்டத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 5 லட்சம் வரை மோசடி செய்ததாக, இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கைதான வாலிபர்

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் மளிகைக்கடை வியாபாரம் செய்துவருகிறார் ரமேஷ். இவரை சில வருடங்களுக்கு முன் சந்தித்த நரேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவர், ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், அங்கு பணியில் சேர்ந்தால், மாதம் சுமார் 90 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவார்கள் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விசா உள்ளிட்ட பல்வேறு கட்டண நடைமுறைச் செலவுகளுக்கான கமிஷன் தொகை மட்டுமே ரூபாய் 2 லட்சம் ஆகும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, மலேசியாவைச் சேர்ந்த அருள் என்பவரையும் ரமேஷுக்கு அறிமுகப்படுத்தி, அவர் மூலமாகத்தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு, ரமேஷ் ஆஸ்திரேலியா செல்வதற்காக ரூபாய் 1.85 லட்சத்தை நரேஷ் மற்றும் விஜய்யிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு, இருவரும் ரமேஷை சென்னை வரை அழைத்துச்சென்று அலைக்கழித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த ரமேஷ், ஊருக்கு வந்து பலரிடமும் விசாரித்ததில், நரேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து இதுபோல பலரிடம் பணத்தை  ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் ரமேஷ் புகார் அளித்தார். அதனடிப்படையில், தற்போது நரேஷைக் கைதுசெய்திருக்கும் காவல் துறையினர், விஜய் மற்றும் அருள் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.