அ.தி.மு.க தரையில் ஊழல் செய்தால், பா.ஜ.க ஆகாயத்தில் ஊழல் செய்கிறது!'- கி.வீரமணி காட்டம் | K veeramani slams ADMK - BJP alliance

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (05/04/2019)

கடைசி தொடர்பு:19:30 (05/04/2019)

அ.தி.மு.க தரையில் ஊழல் செய்தால், பா.ஜ.க ஆகாயத்தில் ஊழல் செய்கிறது!'- கி.வீரமணி காட்டம்

"அ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் ஊழல் செய்வதில்தான் மிகப்பெரிய போட்டி உள்ளது. அ.தி.மு.க தரையில் ஊழல் செய்தால், பா.ஜ.க ஆகாயத்தில் ஊழல் செய்கிறது" என்று பெரம்பலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் தி.க தலைவர் கி.வீரமணி பேசினார்.

கி.வீரமணி

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தரை ஆதரித்து, திராவிடர் கழகம் சார்பில் தேரடித் திடலில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தி.க மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். தி.க தலைவர் கி.வீரமணி பேசுகையில், "நோயாளிகளைப் படுக்கவைத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் ஆம்புலன்ஸ்களில் நோட்டுக் கட்டுகளை அடுக்கிவைத்து, கள்ளத்தனமாகப் பட்டுவாடா செய்தது அ.தி.மு.க தான். இது, விஞ்ஞானத்துக்குக்கூட புரியாத மிகப்பெரிய ஊழலாகும். அந்த ஊழலைக் கண்டுபிடித்து இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், சரக்குகளை ஏற்றிச் செல்கிற கன்டெய்னர்களில் கட்டுக்கட்டாக பணத்தை ஏற்றிச்சென்று பிடிபட்டது அ.தி.மு.க தான். இதுபோன்று, தரையில் செய்த ஊழல்கள் அனைத்தும் அ.தி.மு.க செய்துள்ளது. அதேபோல் ரஃபேல் விமான பேரத்தில் பா.ஜ.க அரசு செய்தது ஆகாயத்தில் செய்த ஊழலாகும். 

கி.வீரமணி பேச்சு

மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட சீட்டுக் கொடுத்த அ.தி.மு.க, பா.ஜ.க-விடம் கொத்தடிமையாக உள்ளது. கோட்டைக்குள்ளே இருக்கிற கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டையே அடகு வைத்தவர்களிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும். தாய்க் கழகமான திராவிடர் கழகம், அ.தி.மு.க-வையும் சேர்த்து மீட்கத்தான் போராடிவருகிறோம். நாட்டில் கருத்துரிமை, எழுத்துரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது, ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார பாசிச ஆட்சியா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் ஊழலில்தான் மிகப்பெரிய போட்டி காணப்படுகிறது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாக்குரிமையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மோடியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி கூட்டம் போட்டது பாரிவேந்தர் தான். இப்போது, மோடியை வழியனுப்பி வைப்பதும் பாரிவேந்தர் தான்" என்று பேசினார்.