`தேர்தல் செலவு கணக்கைக் காட்டாத வேட்பாளர்கள்மீது நடவடிக்கை பாயும்!'- எச்சரிக்கும் ஆணையம் | EC warns candidates over election expenditure

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (05/04/2019)

கடைசி தொடர்பு:19:45 (05/04/2019)

`தேர்தல் செலவு கணக்கைக் காட்டாத வேட்பாளர்கள்மீது நடவடிக்கை பாயும்!'- எச்சரிக்கும் ஆணையம்

"தேர்தல் செலவு கணக்குகளைத் தாக்கல்செய்யாத வேட்பாளர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளைச் செலவினப் பார்வையாளர்கள் துர்கா தத் மற்றும் மனோஜ் குமார் பந்தோகி முன்னிலையில் தாக்கல்செய்தனர்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினப் பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான முதற்கட்ட ஆய்வுகள், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தேசிய மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் இதர வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வுசெய்யப்பட்டன. இந்த ஆய்வுகளில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்காகச் செலவிடப்பட்ட செலவினங்கள் தொடர்பான விவரங்கள், தேர்தல் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகளையும் வேட்பாளர்கள் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட முகவர்களால் தாக்கல்செய்யப்பட்டது. 

வேட்பாளர்களால் தாக்கல்செய்யப்பட்ட தேர்தல் செலவினங்களை ஆய்வுசெய்த தேர்தல் ஆணைய செலவினப் பார்வையாளர்கள், அரியலூர் மாவட்ட செலவின கண்காணிப்புக் குழு பதிவேடுகளுடன் வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. இந்த ஆய்வில், பங்கேற்காத வேட்பாளர்களுக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இந்தியத் தேர்தல் ஆணையம் மூலமாகக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். உரிய விளக்கம் அளிக்காதவர்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செலவினப் பார்வையாளர்கள் தெரிவித்தனர். வேட்பாளர்கள், தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வு, வரும் 10-ம் தேதியும், மூன்றாம் கட்ட ஆய்வு, வரும் 15-ம் தேதியும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான விஜயலெட்சுமி தெரிவித்தார்.