`கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!' - லயோலா கல்லூரி விளக்கம்  | Loyola college issues statement over election poll 

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (05/04/2019)

கடைசி தொடர்பு:18:23 (05/04/2019)

`கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!' - லயோலா கல்லூரி விளக்கம் 

'தேர்தல் வெற்றிவாய்ப்பு குறித்து 'பண்பாடு மக்கள் தொடர்பகம்' வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை' என லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்  இடைத்தேர்தலில், வெற்றிவாய்ப்பு யாருக்கு என்பதுகுறித்து 'பண்பாடு மக்கள் தொடர்பகம்' சார்பாக இன்று காலை கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. இதில், தி.மு.க கூட்டணி 27 முதல் 33இடங்களில் வெற்றிபெறும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 3 முதல் 5 இடங்களில் வெற்றிபெறும் என்றும் அ.ம.மு.க 1 - 2  இடங்களில் வெற்றிபெறும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கிறது. அதேபோல, 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க 9 முதல் 11 தொகுதிகளிலும், அ.தி.மு.க 2 அல்லது 3 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அ.ம.மு.க 3 - 4 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும், கணிக்க முடியாத தொகுதிகளாக 2 தொகுதிகள் உள்ளதாகவும் அவர்கள் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. இதுதொடர்பாக லயோலா கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழகம், புதுச்சேரியில், 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற  இடைத்தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) மாநிலம் முழுவதும் கள ஆய்வு நடத்தி, இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. 
2019 நாடாளுமன்றத் தேர்தல் - 40 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில், பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைக்கும் எமது நிர்வாகத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், நடப்புத் தேர்தல்மூலம் பிரதமராவதற்கான வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான அந்த ஆய்வறிக்கைக்கும் எமது நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

கடந்த சில தேர்தல்கள் தொடர்பாக எமது நிர்வாகம் சார்பில் எந்தவித கருத்துக்கணிப்பும் ஆய்வறிக்கைகளும் வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. இதுபோன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வறிக்கைகளை வெளியிட எங்கள் நிர்வாகத்தில் எந்தத் துறைகளும் தற்போது இல்லை என்று உறுதியளிக்கிறோம். இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்று ஊடகங்கள், செய்திகள் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க விழைகிறோம்'' என்று கூறப்பட்டிருக்கிறது.