``கிரிக்கெட்டைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” - மோதிக்கொள்ளும் சென்னை ரசிகர்கள் | sportwalk conducts an event on cricket quiz in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (05/04/2019)

கடைசி தொடர்பு:18:53 (05/04/2019)

``கிரிக்கெட்டைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” - மோதிக்கொள்ளும் சென்னை ரசிகர்கள்

``கிரிக்கெட்டைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” - மோதிக்கொள்ளும் சென்னை ரசிகர்கள்

பிஎல்-லை அடுத்து, உலகக்கோப்பைக்குத் தயாராக வேண்டும். அடுத்தடுத்து விளையாட்டுத் தொடர்கள் வரிசையாக உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களைக் கையில் பிடிக்க முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கில் பிடித்துவிடலாம். இந்த சீசனில், கிரிக்கெட் சம்பந்தமான புள்ளிவிவரங்களை மீம்ஸ்களில் தெறிக்கவிட்டும், தினமும் சில பல ஸ்டேட்டஸ்களைப் பதிவிட்டும், மற்ற ரசிகர்களுடன் வம்பிழுத்துக்கொண்டும் இந்த இரண்டு தொடர்களை ஜமாய்த்துவிடலாம். அதே வம்பு, அதே புள்ளிவிவரங்கள். ஆனால், மோதிக்கொள்ளும் தளம் வெவ்வேறு. ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் சந்தித்துக்கொண்ட ரசிகர்கள், எதிர் அணி ஆதரவாளர்கள் என மொத்தத்தில் கிரிக்கெட்டைக் காதலிப்பவர்களுக்கான நிகழ்ச்சிகளை சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட் வாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் மெர்ச்சண்டைஸ், டீ-ஷர்ட்ஸ், huddle எனும் ஸ்போர்ட்ஸ் விவாத நிகழ்ச்சிகளை நடத்திவரும் ஸ்போர்ட் வாக் நிறுவனம், விளையாட்டு ரசிகர்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்துவருகிறது. மாதம் ஒருமுறை,  வெவ்வேறு விளையாட்டுகள், அணிகளின் ரசிகர்கள் ஒன்றுகூடி விவாதிக்கின்றனர். ரோஜர் ஃபெடரர், டிராவிட் முதல் கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைகள் வரை அனைத்தும் இங்கு விவாதிக்கப்படும்.

``இது மாதிரியான ஈவென்ட்ஸ், ஸ்போர்ட் வாக்கில் நடப்பது வழக்கம். இந்த வருஷம் உலகக்கோப்பை வேற வருது. இந்திய அணிக்கு சியர் பண்ண தயாராகணும்ல” என்றார் ஸ்போர்ட்ஸ் வாக் நிறுவனர் திவாகர்.


இந்திய கிரிக்கெட் அணியின் official fan club ஆன `பாரத் ஆர்மி’யோடு இணைந்து `ஹைலைட்ஸ் ஃபெஸ்ட் 2019’ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது ஸ்போர்ட் வாக். 1999-ம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது, நான்கு இந்திய ரசிகர்களால் தொடங்கப்பட்ட பாரத் ஆர்மி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைத்துள்ளது.

கிரிக்கெட்

ஹைலைட்ஸ் ஃபெஸ்ட் 2010 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, `பவர் பிளே – அல்டிமேட் கிரிக்கெட் க்விஸ்’ போட்டி நடத்தப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் தகவல் திறனை சோதிக்கும் இந்த க்விஸ் போட்டி, நான்கு கட்டங்களாக நடக்கவுள்ளது. ``முதல் முறையா பாரத் ஆர்மி ரசிகர் பட்டாளம் இப்படியொரு ஈவென்ட்ல கலந்துக்குறாங்க. கிரிக்கெட் ரசிகர்கள்ல எல்லாரும் இந்த ஈவென்ட்டை என்ஜாய் பண்ணுவாங்க. தெரிந்ததும் தெரியாததுமா நிறையத் தகவல்கள், நிறைய கொண்டாட்டம் இதுல இருக்கும். க்விஸ் போட்டியினாலே பரபரப்பா இருக்கும். கிரிக்கெட்டைப் பற்றி யாருக்கு நிறையத் தெரியும்னு கண்டுப்பிடிக்கிறதுல நாங்களும் ஆர்வமா இருக்கோம்” என்றார் திவாகர். 


இந்த க்விஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டி, ஏப்ரல் 6-ம் தேதி (நாளை) சென்னை அடையாறு பேக்யார்டில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் அதகளத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்: க்ளிக் செய்யவும்.