“திருமாவளவன் உயிருக்கு ஆபத்து... தனிப் பாதுகாப்பு வழங்க மறுக்கும் அரசு!” | threat to thirumavalan... But no support from government

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:05 (06/04/2019)

“திருமாவளவன் உயிருக்கு ஆபத்து... தனிப் பாதுகாப்பு வழங்க மறுக்கும் அரசு!”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனி போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் பல முறை முறையிட்டும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

“திருமாவளவன் உயிருக்கு ஆபத்து... தனிப் பாதுகாப்பு வழங்க மறுக்கும் அரசு!”

ன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. தனிப் பாதுகாப்புக் கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, திருமாவளவன் பயணிக்கும் இடங்களிலும், அவர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை மறுத்த திருமாவளவன் தரப்பு, பொதுவான பாதுகாப்பைத் தவிர 24 மணி நேரமும் தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று கோரியது. ஆனாலும், திருமாவளவனுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்கிற அரசுத் தரப்பின் கருத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4-ம் தேதி) முடித்துவைத்தது.  

 

திருமாவளவன்

திருமாவளவனின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் நம்மிடம் பேசினார். “சாதி, மதத்தை முன்வைத்து வெறுப்பு அரசியல் நாடு முழுவதும் விதைக்கப்பட்டு வருகிற இன்றைய சூழலில், மாற்றுக் கருத்துகளை முன்வைக்கிற அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆளுமைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது அரசியல் நடவடிக்கையாகவே மாறிவருகிறது. இந்த நிலையில், சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்தும், அரசியல் சாசனம் உறுதிசெய்துள்ள உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார். அதனால், அவருக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் 18 முறை திருமாவளவன் மீது கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்திருப்பதாகக் காவல்துறையிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்களால் அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றதாகப் பல இடங்களில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். 
இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கும் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் காவல்துறை தனிப்பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோரிடம்  நேரில் மனு அளித்தோம். ஆனால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அதன் பிறகு, கர்நாடகாவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு செய்துகொண்டிருந்த டீம், ரவிக்குமாருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்தனர். அதையடுத்து, நாம் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், புதுச்சேரி முதல்வர் நாராணசாமியையும் நேரில் சந்தித்து தனிப்பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தோம். அப்போதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
கடந்த டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் திருமாவளவன் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துகளை சிலர் தவறாகச் சித்திரித்தனர். அந்த உரைக்காகத் திருமாவளவனின் தலையைச் சீவிவிடுவேன் என்று பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவர்கள் சிலர் பேசினர். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசிடமும் புதுச்சேரி அரசிடமும் பாதுகாப்பு கோரினோம். திருமாவளவன் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு சிறிதுகூட அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால், தேர்தல் நேரத்திலாவது பாதுகாப்புக் கொடுங்கள் என்று முதல்வரிடமும் தலைமைச் செயலாளரிடமும் கேட்டோம். அதற்கும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம் நான் முறையிட்டேன். அதையடுத்து, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் புதுச்சேரி அரசுதான் அந்தப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. 
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மரபுரீதியான பாதுகாப்பைத் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல்தான் ஊர் ஊராகச் சென்று திருமாவளவன் பிரசாரம் செய்துவருகிறார். வி.சி.க-வின் சொத்தாக மட்டுமல்லாமல், தமிழக அரசியலின் ஒரு முக்கிய அடையாளமாகவும் ஆளுமையாகவும் இருந்துவரும் தலைவரின் பாதுகாப்பில் அரசு அக்கறை செலுத்தாமல் இருப்பதை என்னவென்று சொல்வது” என்று வேதனையுடன் சொன்ன சிந்தனைச்செல்வனிடம், “முதல்வரை நேரில் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்?” என்று நாம் கேட்டதற்கு, “முதல்வரைச் சந்தித்தபோது, உடனே காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு முதல்வர் பேசினார். எங்கள் உயிருக்கு இருக்கக்கூடிய ஆபத்து குறித்து சொன்னபோது, உச் கொட்டிய முதல்வர், நாங்கள் சொன்ன விஷயங்களை அக்கறையுடன் காதுகொடுத்துக் கேட்டார். ஆனாலும், தனிப்பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என்றார் சிந்தனைச்செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்