கூலித் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை! - சுயேச்சை வேட்பாளரின் கோரிக்கை விசாரணைக்கு ஏற்பு | SC accepts Salem independent candidate's petition

வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (05/04/2019)

கடைசி தொடர்பு:21:19 (05/04/2019)

கூலித் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை! - சுயேச்சை வேட்பாளரின் கோரிக்கை விசாரணைக்கு ஏற்பு

சுயேச்சை

``வாக்குப்பதிவு நாளில் அரசு மற்றும் தனியார் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தோடு விடுமுறை அளிப்பது போல அமைப்புசாரா தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிப்பதோடு, அரசு ஒரு நாள் சம்பளம் வழங்க வேண்டும்'' என சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிஸ்மில்லா மக்கள் கட்சியின் சுயேச்சை வேட்பாளர் ஷாஜஹான் கோரிக்கை வைத்திருந்தார். இந்தக் கோரிக்கையைத் தற்போது உச்ச நீதிமன்றம் பொது நல வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

ஷாஜஹான்இதுபற்றி சுயேச்சை வேட்பாளர் ஷாஜஹான், ``தேர்தல் நாளன்று மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளத்தோடு விடுமுறை கொடுக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு விடுமுறையோடு சம்பளமும், தேர்தல் பணியில் ஈடுபட்டால், தேர்தலுக்கான சம்பளம் என இரண்டு சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், தினக்கூலியை நம்பி வாழக்கூடிய கட்டடத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் பணியார்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்கள், தேர்தல் தேதியன்று வேலைக்குப் போகமுடியாமல் வரிசையில்  நின்று வாக்களிக்கிறார்கள். அவர்களுக்கு, அன்றைய தினம் கூலி இல்லாமல் சாப்பாட்டிற்குக் கையேந்தும் நிலை உருவாகிறது.

அதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135பி இந்திய அரசு, தேர்தல் நடைபெறும் அன்றைய ஒரு நாள் மட்டும் அனைவரையும் சமமாக மதித்து, அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும்' என்று நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் முதல் கோரிக்கையாக வைத்து பிரசாரம் செய்துவந்தேன்.

ஆனால், சிலர் இதை நக்கலும் நையாண்டியுமாக எடுத்துக்கொண்டு, என்னைக் கிண்டல் செய்தார்கள். அதை நான் பொருட்படுத்தாமல், என்னுடைய கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மாதம் மனுவாக அனுப்பினேன். அதைப் படித்துப்பார்த்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்னுடைய வழக்கைப் பொதுநல வழக்காக கோப்புக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக எனக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து தகவல் அனுப்பியிருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தேர்தலுக்குள் விசாரணையை நிறைவுசெய்து நடைமுறைப்படுத்த வேண்டும்''. என்றார்.