சொகுசுக் காரில் பறிமுதல் செய்யப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறித்த அட்டைகள்! | EC officials captured Visiting cards in kanyakumari; BJP candidate Pon.radhakrishan name printed on it

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (05/04/2019)

சொகுசுக் காரில் பறிமுதல் செய்யப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறித்த அட்டைகள்!

சொகுசு காரில் கொண்டுசெல்லப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறிக்கப்பட்ட விசிட்டிங் கார்டு அளவிலான 10000 அட்டைகளைப் பறக்கும்படையினர் பறிமுதல்செய்த சம்பவம், கன்னியாகுமரி தொகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அட்டை

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு அருகே பெரியவிளை, மடத்துவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவர், பா.ம.க மாநில நிர்வாகியாக உள்ளார். இவரது சொகுசு காரை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, காரில் பெரிய பெட்டிகள் இருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். அந்தப் பெட்டியைத் திறந்துபார்த்தபோது, விசிட்டிங் கார்டு அளவிலான பிரசார அட்டைகள் இருந்தது. அதில், பொன்.ராதாகிருஷ்ணன் படம் மற்றும் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் பெயரும், வாக்களிப்பீர் தாமரைக்கே என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.  கார்டு அச்சடிக்கப்பட்ட பிரின்டிங் பிரஸ் குறித்த விவரங்கள் இல்லை. மேலும், பிரசார அட்டையை எடுத்துச்செல்ல காருக்கு அனுமதி வாங்கப்படவும் இல்லை எனத் தெரியவந்தது.

கார்

இதையடுத்து, கார் மற்றும் சுமார் பத்தாயிரம் கார்டுகளையும் பறக்கும்படையினர் பிடித்து, நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பா.ம.க பிரமுகர் ஹரிகரன் மற்றும் அவருடன் வந்த நபரிடம்  போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், அந்த அட்டைகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கக்கூடிய டோக்கனாக இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றொருபுறம் விசாரணை நடத்திவருகின்றனர். விசிட்டிங் கார்டு அளவிலான பிரசார அட்டை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், கன்னியாகுமரி தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.