அ.ம.மு.க தொண்டர்களின் செயலால் தலையில் அடித்துக்கொண்ட பொதுமக்கள்! | Theni peoples condemns AMMK cadres's behavior

வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (05/04/2019)

கடைசி தொடர்பு:21:41 (05/04/2019)

அ.ம.மு.க தொண்டர்களின் செயலால் தலையில் அடித்துக்கொண்ட பொதுமக்கள்!

அ.ம.மு.க தொண்டர்களின் அநாகரிக செயலைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டனர், தேனி மாவட்ட பொதுமக்கள்.

போலீஸாருடன் வாக்குவாதம்

தேனி பங்களாமேடு பகுதியில் இன்று பிரசாரம் செய்ய அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வர இருந்தார். அவர் வருவதற்கு முன்னதா,க இன்று மாலையில் இருந்தே அவரது தொண்டர்கள் பங்களாமேடு பகுதியில் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல  தேனி நேரு சிலையில் இருந்து பிரசாரம் செய்ய இருந்த இடமான பங்களாமேடு வரை அ.ம.மு.க தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து, தேனி − மதுரை சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

நிலைமையைப் புரிந்துகொண்ட காவல்துறை, அ.ம.மு.க தொண்டர்களை விலக்கிவிட்டு, வாகனங்கள் செல்ல  வழியை ஏற்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அ.ம.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் தொண்டர்கள், காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். காவல் துறையினர் சொன்னதுபோல வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளிடம் சண்டைக்குச் சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகளும் பயணிகளும், இவர்களின் அநாகரிக செயலைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டு சென்றனர். இச்சம்பவத்தை அடுத்து, வாகனங்களைக் காவல் துறையினர் மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. அதிகம் பேர் கூடுவார்கள் எனத் தெரிந்தும் இப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்காமல்,  மாலையில் இருந்தே மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பிவிட்டிருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.