வாசன் ஐ கேர் நிர்வாக இயக்குநருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்! | Egmore court issues non bailable warrant against vasan eye care managing director

வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (05/04/2019)

கடைசி தொடர்பு:21:56 (05/04/2019)

வாசன் ஐ கேர் நிர்வாக இயக்குநருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்!

வாசன் ஐ கேர் நிறுவனம், இந்திய அளவில் மிகவும் பிரபலமான கண் மருத்துவமனைக் கிளைகள் பலவற்றை உடையது. அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஏ.எம். அருண் மற்றும் அவரது மனைவி மீரா அருண். இவர்கள்மீது வருமான வரி ரிட்டன்ஸை முறையாகத் தாக்கல் செய்யாத வழக்கில் ஜாமீனில்  வெளிவரமுடியாத பிடி வாரன்ட் பிறப்பித்து, எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம்

வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யாத குற்றத்துக்காக, டாக்டர்.ஏ.எம்.அருண் மற்றும் அவரது மனைவி மீரா அருண் ஆகியோர்மீது வருமான வரித் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அரசு வழக்கறிஞர் ஷீலா, வருமான வரித்துறையினர் சார்பில் வாதிட்டார்.  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர்.ஏ.எம்.அருண் மற்றும் அவரது மனைவி மீரா அருண் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள், இந்த வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாமல் இருந்த காரணத்தினால், அவர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை மே மாதம் 6-ம் தேதி, மறு விசாரணைக்காகத் தள்ளிவைத்து உத்தரவிட்டார் நீதிபதி மலர்மதி. சமீபத்தில், இதே நீதிமன்றம் மு.க.அழகிரி மகளுக்கு இதேபோல ஒரு வழக்கில் பிடிவாரன்டும், என்.இ.பி.சி இந்தியா லிமிடெட்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருப்பதி குமார் கெம்காவிற்கு வருமான வரி ஏய்ப்பு வழக்கில், ஐந்து ஆண்டுகள் சிறையும் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.