பா.ஜ.க வேட்பாளருக்கு முக்கியத்துவம்... எங்களுக்கு இல்லை! - தே.மு.தி.க தொண்டர்கள் புலம்பல் | DMDK cadres express displeasure over ADMK's activities

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (05/04/2019)

பா.ஜ.க வேட்பாளருக்கு முக்கியத்துவம்... எங்களுக்கு இல்லை! - தே.மு.தி.க தொண்டர்கள் புலம்பல்

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, பா.ஜ.க வேட்பாளருக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எங்கள் கட்சி வேட்பாளருக்குத் தரவில்லை என தே.மு.தி.க தொண்டர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பைபாஸ் ஆகிய இடங்களில் தே.மு.தி.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி, முதல்வரின் பின்னாலேயே நின்றுகொண்டு முரசு சின்னத்தை கையால் அசைத்துக்கொண்டே இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, நயினார் நாகேந்திரன் முதல்வரின் அருகே நின்றுகொண்டிருந்தார். மேலும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பா.ஜ.க கொடியை கையில் பிடித்து அசைத்தபடி தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார். ஏற்கெனவே, அ.தி.மு.க-வை பா.ஜ.க-வின் பி டீம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டு அ.தி.மு.க தொண்டர்கள் வருத்தமடைந்தனர்.

தேமுதிக வேட்பாளர்

தே.மு.தி.க தொண்டர்களோ, பா.ஜ.க வேட்பாளருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த தமிழக முதல்வர், எங்கள் கட்சி வேட்பாளருக்கு எந்த முக்கியத்துவமும் தராமல், ஏதோ பேருக்கு பிரசாரம் செய்துள்ளார். வேண்டா வெறுப்பாக எங்கள் வேட்பாளருக்கு பிரசாரம் செய்தது மாதிரியே இருக்கு. கூட்டணிக் கட்சிகளுக்குள் இப்படி எல்லாம் பிரிவினை பார்க்கக் கூடாது என மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர்.