ரயிலுக்கு உள்ளே ஏறவிடலை..! - ஓட்டு போட ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த அஸ்ஸாம் தொழிலாளர்கள் | Assam labours stranded in tirupur railway station

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:23:00 (05/04/2019)

ரயிலுக்கு உள்ளே ஏறவிடலை..! - ஓட்டு போட ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த அஸ்ஸாம் தொழிலாளர்கள்

ரயிலில் கதவுகள் அடைக்கப்பட்டதால், தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அஸ்ஸாம் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் தவித்தது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்ஸாம் தொழிலாளர்கள்

திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில், பல்வேறு வட மாநிலப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்துவருகிறார்கள். இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு செல்வதற்காக, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் இன்றைய தினம் திருப்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர்.

இதற்காக, கோவையில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்திக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். இந்த நிலையில்,  இன்று மதியம் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும், 50- க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் தொழிலாளர்கள் அந்த ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டனர். ஆனால், அந்த ரயில் பெட்டிக்குள் இருந்த சக வடமாநிலப் பயணிகள், இந்தத் தொழிலாளர்களை உள்ளே ஏறவிடாமல் ரயில் பெட்டிகளின் கதவுகளைப் பூட்டிவைத்தனர். தொடர்ந்து போராடியும் ரயில் பெட்டிகளின் கதவுகளைப் பயணிகள் திறக்காததால், தொழிலாளர்கள் யாரும் ஏறாமலேயே ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், பெரும் சோகத்தில் ஆழ்ந்த அஸ்ஸாம் தொழிலாளர்கள், அதன்பிறகு ரயில்நிலைய அதிகாரிகளிடம் சென்று நடந்தவற்றைப் பற்றி முறையிட்டனர். ஆனால் அதிகாரிகளோ, எங்களது தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்தனர். 

பின்னர் நம்மிடம் பேசிய அஸ்ஸாம் தொழிலாளர்கள்,"எங்களுக்கு ஊருக்கு செல்ல விடுமுறை கிடைப்பதே அதிசயம். தேர்தலில் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்பதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே எங்களது நிறுவனத்தில் விடுமுறைக்கு அனுமதிபெற்று, ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தோம். இன்றைக்கு ரயிலில் ஏறினால்தான் 4 நாள்களுக்குப் பிறகு எங்களின் ஊருக்குப் போய்ச் சேர முடியும். தேர்தலில் ஓட்டு போட ஆர்வத்தோடு ஊருக்குக் கிளம்பினோம். அத்தனையும் வீணாகிவிட்டது. சம்பவத்தின்போது ஒரு ரயில்வே காவலர்கூட பிளாட்பார்மில் இல்லை. காவலர்கள் யாராவது இருந்திருந்தால், பயணிகள் ரயில் கதவை திறந்திருப்பார்கள். நாங்களும் ஓட்டு போட ஊருக்கு சென்றிருப்போம் என்றார்கள் வேதனையுடன்.