``அவர் கொடுத்த தைரியத்தில்தான் இப்படிப் பேசுகிறேன்!’ – ஈரோடு பிரசாரத்தில் கமல்ஹாசன் | kamalhassan campaign speech at erode

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:07:23 (06/04/2019)

``அவர் கொடுத்த தைரியத்தில்தான் இப்படிப் பேசுகிறேன்!’ – ஈரோடு பிரசாரத்தில் கமல்ஹாசன்

``அங்கு ஒரு முன்னாள் மந்திரி தன் மகனுக்காக மூட்டை மூட்டையாகக் கட்டி நோட்டா(!) போட்டுக்கிட்டு இருக்காரு. நீங்களும் நோட்டா போட்டா நாடு என்னாகுறது” என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

கமல்

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல்ஹாசன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த சரவணகுமாரை ஆதரித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

கமல்

அப்போது அவர் பேசுகையில், ``காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் பெரிதாகப் படித்தவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் மக்களைப் படித்தவர்கள். அவர்களைப் பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன்.  இந்தத் தேர்தல் பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கானத் தேர்தல் அல்ல. நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதைத் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி-க்கள் சேர்ந்துதான் முடிவு செய்ய வேண்டும். இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தமிழகம் புரட்சியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.  அதற்கு வலுசேர்க்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தில் சேர தி.மு.க., அ.தி.மு.க-வில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள். நாங்கள் நேர்மையானவர்கள் என்பதால்தான் எங்களை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள். பண மூட்டையைப்  பதுக்கிக்கொண்டிருக்கும் திருடர்கள் எப்படிப் பேச முடியும். இப்போது திருடர்களுக்கு தேள் வேறு கொட்டிவிட்டது, இனி பேசவே மாட்டார்கள். ஈரோட்டில் இருந்த பெரியவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன். யாரையும், எந்தத் தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் எனக்கு உள்ளது. இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும். ஊழல் செய்பவர்கள் எல்லோருமே திருடர்கள் தான். மாண்புள்ள தலைவர்கள் பலர் இருந்த தமிழ்நாடு, திருடர்கள் நாடாக மாறிவிடக்கூடாது. இது திரு நாடு, திருடர்கள் நாடு அல்ல. 

கமல்

ஆட்சியாளர்கள் திருடுவதை நிறுத்தினாலே, இரண்டு தமிழ்நாட்டை நடத்த முடியும். எங்களுக்கு யாரையும் பிடிக்கலை. நாங்க நோட்டாவுக்கு ஓட்டு போடுறோமுன்னு சொல்லாதீங்க. அங்க ஒரு முன்னாள் மந்திரி தன் மகனுக்காக மூட்டை மூட்டையா கட்டி நோட்டா(!) போட்டுக்கிட்டு இருக்காரு. நீங்களும் நோட்டா போட்டா நாடு என்னாகுறது. நாடு நன்றாக இருக்க, உங்கள் மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த நல்லவர்  கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இருப்பார். ஓட்டுப்போடப் போகும்போது எலெக்‌ஷன் பூத்துக்கு உள்ளே செல்லும் முன்பு உள்ள 100 மீட்டர் வரை உங்கள் மனதை மாற்றப் பல வேலைகள் நடக்கும். ஆனால், எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு ஓட்டுப்போடுங்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்ய பிரதிநிதி தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவரது ராஜினாமா கடிதம் உங்களுக்கு வந்து சேரும்” என்றார்.