`ராமேஸ்வரம் அருகே அ.ம.மு.க-வினரிடம் சிக்கிய அமைச்சர்!' - தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீஸார் | Aiadmk Minister manikandan rounded by ammk cadres

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:12:30 (06/04/2019)

`ராமேஸ்வரம் அருகே அ.ம.மு.க-வினரிடம் சிக்கிய அமைச்சர்!' - தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீஸார்

 ராமேஸ்வரம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அ.ம.மு.க ஆதரவாளர்கள் இடையே அமைச்சர் மணிகண்டனின் கார் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.ம.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் ஆனந்த் போட்டியிடுகிறார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் ஆனந்த் பணியாற்றி வருகிறார். இதனால் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் தரப்புக்கும் ஆனந்த் தரப்புக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் எழுவது வழக்கம். இந்த நிலையில் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் ஆனந்த் தனது ஆதரவாளர்களுடன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அ.ம.மு.க தொண்டர்களிடையே சிக்கி கொண்ட மணிகண்டன் கார்

நேற்று காலை மண்டபம் ஒன்றியத்தில் உள்ள பட்டினம்காத்தான் துவங்கி வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், நாகாச்சி, உச்சிப்புளி, தாமரைக்குளம், வேதாளை, மண்டபம் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் ராமேஸ்வரம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அதே நேரத்தில் அமைச்சர் மணிகண்டன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ராமேஸ்வரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாகக் கூறி அ.ம.மு.க-வினர் பிரசாரம் செய்ய போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் அ.ம.மு.க வேட்பாளர் ஆனந்த், அமைப்புச் செயலாளர் ஜி.முனியசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் கவிதா, மண்டபம் ஒன்றிய நிர்வாகி கணேசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தங்கச்சிமடம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளருக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கரவாகனங்களில் சென்றபடி அ.ம.மு.க-வினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அ.ம.மு.க வாக்கு சேகரிப்பில் சிக்கிய அமைச்சர் கார்

இந்த நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக அமைச்சர் மணிகண்டன் தனது காரில் தங்கச்சிமடம் காவல் நிலையம் அருகே வந்தபோது, அவரின் கார் அ.ம.மு.க-வினரின் வாகனங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது. காரில் அமைச்சர் மணிகண்டன் இருப்பதைக் கண்ட அ.ம.மு.க-வினர் அமைச்சரின் காரைச் சுற்றி நின்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக கோஷம் போட்டதுடன், கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அமைச்சரையும் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் கோபமடைந்த அமைச்சர் தனது டிரைவரிடம், வண்டியை வேகமாக எடுக்கக் கூறியுள்ளார். ஆனால், அவர்களது வாகனம் செல்ல வழி இல்லாத அளவுக்கு அ.ம.மு.க-வினர் சூழ்ந்திருந்தனர். 
 தகவல் அறிந்து வந்த தங்கச்சிமடம் போலீஸார் அமைச்சரின் வாகனத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த அ.ம.மு.க-வினர் மீது லேசான தடியடி நடத்தி விரட்டியதுடன், அமைச்சரைப் படம் எடுத்துக்கொண்டிருந்த செல்போன்களை தட்டி விட்டனர். இதன்பின்  அ.ம.மு.க-வினர் இடையே மாட்டிக்கொண்ட அமைச்சர் மணிகண்டனின் கார் அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றது. இதனால் தங்கச்சிமடம் பகுதியில் சுமார் அரை மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.