`மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஏன் கரைவேட்டி கட்டுவதில்லை?' - கமல் விளக்கம் | Kamalhassan speech at tirupur election campaign program

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (06/04/2019)

கடைசி தொடர்பு:09:05 (06/04/2019)

`மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஏன் கரைவேட்டி கட்டுவதில்லை?' - கமல் விளக்கம்

``மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபின் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நிரூபித்தால் உடனடியாக அவர்களது ராஜினாமா கடிதம் மக்களுக்கு முன்பாக வந்து சேரும்'' என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``மக்கள் நீதி மய்யத்தின் மீது அனைத்து தரப்பினரும் அன்பு செலுத்தி வருகிறார்கள். பணம் கொடுக்காமல் மக்கள் நீதி மய்யத்துக்கு வரும் கூட்டத்தைப்போல எந்த கட்சியாலும் கூட்டிவிட முடியாது. மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்களுக்கு வேட்டி கட்ட மிகவும் பிடிக்கும். ஆனால், அப்படிக் கட்டினால் மற்ற அரசியல்வாதிகளின் சாயல் வந்துவிடுமோ என்ற காரணத்துக்காகத்தான் நாங்கள் வேட்டி கட்டுவதில்லை. மக்கள் நீதி மய்யம் ஓட்டை பிரிக்க வந்த கட்சி என்று சொல்கிறார்கள். நாங்கள் ஓட்டை பிரிக்க வந்தவர்கள் அல்ல. மக்களை இணைக்க வந்தவர்கள்.

ஓட்டைப் பிரித்துக் கொள்ளையடிக்கும் கூட்டம் டெல்லியிலே இருக்கிறது. அங்கிருந்து ஒரு கூட்டம் இங்கு கொள்ளையடிக்கவும் வந்துள்ளது. கஜா புயல் பாதிப்பைக் காண டெல்லியிலிருந்து வராத கூட்டம், தேர்தல் காலத்தில் வாக்கு கேட்க மட்டும் எத்தனை தடவை வருகிறது என்று பாருங்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபின் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நிரூபித்தால் உடனடியாக அவர்களது ராஜினாமா கடிதம் மக்களுக்கு முன்பாக வந்து சேரும். இதை மற்ற கட்சிகளால் சொல்ல முடியுமா?. அப்படிச் சொன்னால் அவர்கள் கட்சிகளையே கலைக்க நேரிடும்'' என்றார்.