`சாதிக் பாட்சா மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க நடவடிக்கை எடுப்போம்!’ - எடப்பாடி பழனிசாமி உறுதி | Edappadi palanisamy slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:09:45 (06/04/2019)

`சாதிக் பாட்சா மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க நடவடிக்கை எடுப்போம்!’ - எடப்பாடி பழனிசாமி உறுதி

``கொடநாடு வழக்கு பற்றி தொடர்ந்து ஸ்டாலின் பேசினால், சாதிக் பாட்சா மர்ம மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வாங்கி கொடுப்போம்''  என்று எடப்பாடி பழனிசாமி மதுரையில் சவால் விட்டு பேசினார். 
     

சாதிக் பாட்சா

மதுரை நாடாளுமன்றத்தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியனை ஆதரித்து நேற்று மதுரையில் முக்கிய இடங்களில் பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறைவாக புதூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராஜ்சத்தியன் வெற்றி பெறுவார். அண்ணன் எடப்பாடியார் தலைமையில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்'' என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ``இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது ராஜ் சத்யன் வெற்றி பெற்றாகிவிட்டது. எவ்வளவு வித்தியாசம் என்பதற்குத்தான் தேர்தலே.

தி.மு.க மேடைகளில் கலைஞர் பேசினால் ஒரு வீச்சு இருக்கும், அவருடைய நடை அழகாக இருக்கும். அவர் பேச்சில் ஒரு கதை இருக்கும் அவ்வளவு அருமையாகப் பேசுவார். ஆனால், ஸ்டாலினுக்குப் பேசத் தெரியல... இவர் பேசுறதைப் பார்த்து சி.பி.எம் வேட்பாளர் வெங்கடேசனுக்கு கிடைக்கிற ஓட்டையும் கெடுத்துவிடுவார் போல. ஸ்டாலின் எதிர்த்தையும் மீறி பொங்கலுக்கு ரெண்டு ஐநூறு ரூபாய் கொடுத்தவர் அண்ணன் எடப்பாடி. இன்னும் பல மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்க உள்ளார். அதையெல்லாம் தடுப்பது ஸ்டாலின் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார். 

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``ஸ்டாலின் தினமும் ஒரு குற்றச்சாட்டை வைத்துப் பேசுகிறார். எதுவுமே உண்மையில்லை, கொடநாடு கூலிப்படையினரை வெளியில் எடுக்க ஜாமீன் கொடுக்க தி.மு.ககாரர்களுக்கு ஸ்டாலின்தான் உத்தரவிட்டார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்ல இவருக்கு என்ன தகுதி உள்ளது. சட்டசபையிலேயே அன்று ஜெயலலிதாவை இழிவு படுத்தியவர்கள். இப்போதுகூட மறைந்த சாதிக் பாட்சா மனைவி கொடுத்த விளம்பரத்துக்காகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அரசுக்கும் மனு கொடுத்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் சாதிக் பாட்சா வழக்கு சி.பி.ஐ.விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.... சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும். அது மட்டுமல்ல தி.மு.க ஆட்சியில் நடந்த பல மர்ம மரணங்களும் மீண்டும் விசாரிக்கப்படும்'' என்றார்.