ஆம்பூர் அருகே லாரிக்கு அடியில் புகுந்த கார்! - முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரவேல் உட்பட 3 பேர் பலி | former MLA died in car accident

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:10:04 (06/04/2019)

ஆம்பூர் அருகே லாரிக்கு அடியில் புகுந்த கார்! - முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரவேல் உட்பட 3 பேர் பலி

ஆம்பூர் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரிக்கு அடியில் கார் புகுந்த கோர விபத்தில், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.கே.சி.சுந்தரவேல், அவரின் மனைவி உட்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.சி.சுந்தரவேல்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஏ.கே.சி.சுந்தரவேல் (68). இவர், 1991 முதல் 1996 வரை திருப்பத்தூர் எம்.எல்.ஏ-வாகவும், 2001 முதல் 2006 வரை திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் நகரச் செயலாளராக இருந்தார். சுந்தரவேலின் மனைவி விஜயலட்சுமி (65). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இன்று காலை மனைவியுடன் காரில் சென்னை புறப்பட்டுச் சென்றார். காரை, ஓட்டுநர் வீரமணி இயக்கினார்.

விபத்து

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரை அதிவேகமாக ஓட்டியுள்ளார். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த கனரக லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கண் இமைக்கும் நொடியில் லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணித்த முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.சி.சுந்தரவேல், அவரின் மனைவி, ஓட்டுநர் ஆகிய மூவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். ஓசூரிலிருந்து சென்னைக்கு அந்த லாரி சென்றுகொண்டிருந்ததாக தெரிகிறது. 

தகவலறிந்துவந்த ஆம்பூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நொறுங்கிய காருக்குள் சிதைந்துகிடந்த உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், உடல்களை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.