கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ தங்கக்கட்டிகள்! - வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை | Gold caught in covai by election flying squad

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (06/04/2019)

கடைசி தொடர்பு:11:16 (06/04/2019)

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ தங்கக்கட்டிகள்! - வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கக்கட்டி​​​​​

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிங்க்ஸ் எனும் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகின்றன. தங்கப் பெட்டகம் போன்று செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களுக்குச் சொந்தமான தங்கக் கட்டிகளை சேமித்து வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள பிரிங்க்ஸ் நிறுவனத்தின் கிளையிலிருந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் ஏழு பேருக்கு வழங்குவதற்காக சுமார் 149 கிலோ எடையிலான தங்கக் கட்டிகளை தங்களுக்குச் சொந்தமான டெம்போ டிராவலர் வேன் மூலம் எடுத்துச் சென்றனர்.

அந்த வாகனம் கோவை புளியகுளம் பகுதியை அடைந்தபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி  சோதனை செய்தனர். வாகனத்தின் உள்ளே தங்கக் கட்டிகள் இருந்தது. ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் வாகனத்தில் வந்தவர்களிடம் இல்லை. இதையடுத்து, தங்கக் கட்டிகளுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

இதனிடையே, தங்கநகை உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட நகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் 25-க்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்கக் கட்டிகளை மீட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன்பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தகுந்த ஆவணங்கள் இருந்தும் தங்க நகைகளை பறிமுதல் செய்வதாகவும், இதனால் தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனை முற்றிலும் பாதித்துள்ளதாகவும் கூறி, இன்று கோவையில் உள்ள தங்க நகை கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் 600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கடைகளை திறக்கப்போவதில்லை என கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து வெங்கட்ராமன் தெரிவித்து உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க