கண்டுகொள்ளப்படாத பிறந்தநாள்! - மறக்கப்படுகிறாரா ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷா? | Field Marshal Maneksha birthday

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (06/04/2019)

கடைசி தொடர்பு:11:15 (06/04/2019)

கண்டுகொள்ளப்படாத பிறந்தநாள்! - மறக்கப்படுகிறாரா ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷா?

வங்கதேசம் என்னும் நாடு உருவாகக் காரணமாக இருந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷா மறக்கப்படுகிறாரா?

ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷா

சாம் பகதூர் மானெக்‌ஷா கடந்த 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி பிறந்தார். இரண்டாம் உலகப்போர், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போர்கள் மற்றும் 1962-ம் ஆண்டு நடந்த இந்திய - சீனா போரில் பங்கு பெற்றவர். இந்திய ராணுவத்தில் ஏராளமான பொறுப்புகளை வகித்து 1969-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 8-வது தளபதியாக பொறுப்பேற்றார். இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த சிறப்புமிக்க பதவியான ஃபீல்டு மார்ஷல் பதவி பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற காரணமாகவும் இருந்தார். இப்போரின் மூலம் வங்கதேசம் என்ற நாடு உருவாவதற்கும் காரணமாக இருந்தவர். 

8-வது கூர்க்கா ரைபில் படைப் பிரிவின் கர்னல் ஆப் ரெஜிமெண்ட் பதவியும் வகித்துள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டார். 1973-ல் இவர் ஓய்வு பெற்ற பின் தன் மனைவி சில்லுவுடன் குன்னூரில் குடியேறினார். அவருடைய மனைவி இறந்த பின்னரும், அவர் குன்னூரிலேயே தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது 94-வது வயதில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி மரணமடைந்தார். இவரது உடல் ஊட்டியில் உள்ள பார்சி கல்லறையில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரைக் கவுரவிக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு அவர் கல்லறை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு விழா நடத்தப்பட்டது. இதில், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, அப்போதைய ராணுவ தளபதி வி.கே.சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் 105-வது பிறந்த நாள். அவரின் நினைவாக எவ்விதமான அஞ்சலி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இது தேசப்பற்றாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

மானெக்‌ஷா குறித்து தொடர்ந்து எழுதி வரும் மருத்துவர் மகேஷ்வரன் கூறுகையில், ``பீல்டு மார்ஷல் மானெக்‌ஷா தனது ஓய்வுக் காலத்தை குன்னூரில் கழித்தவர். வங்கதேசம் என்னும் ஒரு தேசம் உருவாகக் காரணமாக இருந்தார். இவரது இறப்புக்கு வங்கதேச நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இவருக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவரான பின் நேரில் வந்து அவருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கிச் சென்றார். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற பீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவுக்கு அவர் பிறந்த தினத்தன்று மரியாதை செலுத்தப்படாதது வேதனை அளிக்கிறது'' என்றார்.
...