`தேர்தல் வந்தவுடன் கோயில் கோயிலாக சுத்துறாங்க!'-அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் மன்னார்குடி ஜீயர் | Vote for those who support Hindus, says Mannargudi jeeyar.

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:11:45 (06/04/2019)

`தேர்தல் வந்தவுடன் கோயில் கோயிலாக சுத்துறாங்க!'-அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் மன்னார்குடி ஜீயர்

இந்துக்களை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார் மன்னார்குடி ஜீயர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். அந்தச் சம்பவத்தையடுத்து பொதுக்கூட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 8 பேர் மீதும் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து இருதரப்பிலும் 16 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மன்னார்குடி ஜீயர்

இச்சம்பவம் திருச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தவே நேற்று திருச்சி வந்த மன்னார்குடி செண்ட லங்கார செண்பக மன்னார் ஜீயர், இரவு 7 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வடக்கு உத்தர வீதியில் இருக்கும் மடத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மன்னார்குடி ஜீயர், ``எல்லா அரசியல்வாதிகளும் இந்துக்களுக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இந்து விரோதிகளாக இருந்த ஸ்டாலின், திருமாவளவன், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் வந்தவுடன் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்கள். அவர்களுக்குக் கும்ப மரியாதை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தற்போது தான் இந்து விரோதி இல்லை என்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளின் சிலைகளை மூட வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால், பெரியார் சிலையை எங்கும் மூடவில்லையே ஏன். அவர் அரசியல்வாதி இல்லையா. சில இடங்களில் திருவள்ளுவர் சிலைகள்கூட மூடப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் சிலைகள் மூடப்படவில்லை. இதற்கு அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து மதச் சடங்குகள் குறித்து தவறாகப் பேசும் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் இந்து விரோதி இல்லை என்கிறார். நெற்றியில் குங்குமம் வைத்தால் அழித்துவிடும் அவர், மசூதிக்குள் செல்லும்போது குல்லா போட்டுச் செல்கிறார். கிருஷ்ணர் குறித்து அவதூறாகப் பேசி வரும் வீரமணி பிற மதங்கள் குறித்தும் பேச மறுப்பது ஏன். தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராகப் பேசிவரும் வீரமணி மீது வழக்கு போட வேண்டும்.

நடிகர் ராதாரவி ஒரு நடிகையைப் பற்றி இழிவாகப் பேசியதாக கூறி, அவரைக் கட்சியை விட்டு நீக்கினார் ஸ்டாலின். ஆனால், பெண் தெய்வமான ஆண்டாள் குறித்து பேசிய வைரமுத்து மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து என்பது ஒரு கலாசாரம், சாதியும் மதமும் இல்லை. ஆனால், கலாசாரத்தையே விரோதமாகப் பேசுவது சரியானதல்ல. இந்துக்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றத்தான் இந்து வாக்காளர்களை மட்டும் தேர்தலில் நிறுத்தி உள்ளனர். இந்து விரோதம் என்பது கலாசார விரோதம். அந்த  கலாசாரத்தை சீரழிப்பவர்களைக் கண்டிக்கின்றோம். இந்து விரோத செயல்பாடுகள் நடைபெறும்போது, நாங்கள் போராடி வருகிறோம். இது சந்நியாசிகளின் உரிமை. அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு. இந்து கலாசாரத்துக்கு விரோதமாகப் பேசுவோர்கள் மீது வழக்கு தொடரப்படும். அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும்வரை விட மாட்டோம். இந்துக்களை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.