`நாங்கள் செய்த பாவம் என்ன?'- தஞ்சாவூர் பிரசாரத்தில் கண் கலங்கி நா தழுதழுத்த வைகோ! | 2019 election mdmk vaiko speech at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (06/04/2019)

கடைசி தொடர்பு:12:11 (06/04/2019)

`நாங்கள் செய்த பாவம் என்ன?'- தஞ்சாவூர் பிரசாரத்தில் கண் கலங்கி நா தழுதழுத்த வைகோ!

கஜா புயலில் நான்கு மாவட்ட மக்கள் தென்னை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக நின்றனர். 89 பேர் இறந்தனர். பிரதமரான நீங்கள் ஓர் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லையே. நாங்கள் செய்த பாவம் என்ன என்று தஞ்சாவூர் பிரசாரத்தில் கண், கலங்கி நா தழுதழுக்க வைகோ பேசியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

வைகோ பிரசாரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பழனிமாணிக்கம், தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், ``இந்தத் தேர்தல் இந்திய துணைக்கண்டத்தில் எதிர்கால போக்கை தீர்மானிக்க கூடியது ஆகும். பிரதமர் மோடி எதேச்சதிகார தோனியில் ஒவ்வொரு நாளும் நம்மை அச்சுறுத்தும் கருத்தை கூறி வருகிறார். இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி பயன்படுத்திப் பேசியுள்ளார். அப்படியொரு சிந்தனை இந்தியாவில் தி.மு.க கூட்டணி, பல்வேறு மாநிலக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகளுக்கு இருந்ததே இல்லை. அதுபோன்ற கருத்தைக் கூறியதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், சங்க்பரிவார அமைப்புகள் படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டதை யாரும் மறக்க முடியாது.

வைகோ

இவர்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால் மறுபடியும் எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ரத்தக்களரி நிலை ஏற்படும். ஜிஎஸ்டியைவிட மிகப்பெரிய ஆபத்தாக ஆன்லைன்வர்த்தகம் முறையைக் கொண்டு வருவர். இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேக்கே தாட்டூவில் அணைக்கட்டிக் கொள்வதற்கு கர்நாடகத்தில் சதிக்கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மேக்கே தாட்டூவில் அணைக்கட்டிக் கொள்ள கர்நாடகத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக அனுமதி அளித்தது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. ஒரு சில ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நிலங்களை அதானி, அம்பானி, வேதாந்த குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் வாங்கி பல அடி ஆழத்துக்கு துளைப்போட்டு மீத்தேன், ஷேல் எரிவாயு போன்றவற்றை எடுப்பார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

தஞ்சாவூரில் வைகோ பிரசாரம்

இதேபோல் பெருநிறுவனங்களும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் ஈட்டும். ஆனால், எத்தியோப்பியாவைப் போல மாறி சோழநாடு அழிந்துவிடும். இப்படிப்பட்ட ஆபத்து நெருங்கும் நிலையில் அதைத் தடுத்து நிறுத்தும் சூழ்நிலையில் இங்குள்ள எடப்பாடி அரசு இல்லை. இதற்கு காரணம் அ.தி.மு.க அரசு மீது உள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை மிரட்டுகிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுட்டுக்கொன்றது இந்த கொலைகார அரசு. இதுபோன்ற நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் நடந்தது இல்லை. நீட் தேர்வால் டாக்டராக முடியாமல் அனிதா தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கஜா புயலில் நான்கு மாவட்ட மக்கள் தென்னை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக நின்றனர். 89 பேர் இறந்தனர். பிரதமரான  நீங்கள்  ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லையே. நாங்கள் செய்த பாவம் என்ன, நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா. ஏன் எங்களை வெறுக்கிறீர்கள் என கண் கலங்கி, நா தழுதழுத்தார். பின்னர் இதற்கு வாக்காளர்கள் நீதிவழங்க வேண்டும். தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய உங்கள் கையில் உள்ளது. அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய  வேண்டும்'' என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க