`ஹலோ, நான் காளியம்மாள் பேசுகிறேன்'- வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் அதிரடி  | The Nam Thamilar party candidate action in campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:12:45 (06/04/2019)

`ஹலோ, நான் காளியம்மாள் பேசுகிறேன்'- வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் அதிரடி 

வேட்பாளர் காளியம்மாள்

வடசென்னை  தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள், வாக்குசேகரிப்பின்போது கழிவுநீர் தேங்கியிருந்ததைப் பார்த்து அதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தார்.  

வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள், விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு கட்சியினருடன் சேர்ந்து வேட்பாளர் காளியம்மாள் வாக்குகளைச் சேகரித்தார். 

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ``வணக்கம் நான் காளியம்மாள். நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னையில் களம் காண்கிறேன். எங்களுக்கு எதிர்ப்பலை இல்லை. மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் எங்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். ராயபுரம் தொகுதி மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி. மீனவர்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன். துறைமுகம் சார்ந்த பிரச்னைகள், மீனவர்களை வேறு இடத்தில் குடியமர்வு பிரச்னை என அனைத்துப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பேன். உழைக்கும் மக்களுக்காக நிரந்தர குடியுரிமைக்காகப் பாடுபடுவேன். 

 வேட்பாளர் காளியம்மாள்

ஆர்.கே.நகர் தொகுதியிலும் ராயபுரம் தொகுதியிலும் குடிநீரோடு கழிவுநீர், பெட்ரோல் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீரில் எப்படி கழிவு நீர் கலக்கிறது என்பதை ஆய்வுசெய்து அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். நாம் தமிழர் கட்சி மனிதர்களுக்காக மட்டும் அரசியல் பண்ணவில்லை. உலக அரசியல் செய்கிறோம். அனைத்து உயிரினங்களுக்காகவும் அரசியல் பண்ணுகிறோம். குடிநீர் மக்களுக்குத் தேவையான ஒன்று. அதை விட்டுக் கொடுக்க முடியாது. இதனால் வடசென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். என்னுடைய முதல் நடவடிக்கை அதுதான். வடசென்னை மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். 

என்னைப் போல ஏழை நடுத்தர மக்கள்தான் அதிகளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். வலி தெரிந்தவர்கள்தான் வாய்ப்பு அளிப்பார்கள். இதனால் அவர்கள் என்னை நிச்சயம் ஆதரிப்பார்கள். மக்களின் பிரச்னைகளை பிரசாரத்தில் பேசுகிறேன். வாக்கு சேகரிக்கும் இடத்தில்கூட மக்களின் பிரச்னைகள் குறித்தே சிந்தித்து நடவடிக்கை எடுக்கிறேன். மற்றவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. மேலும், எங்களிடம் குழந்தைகளுக்கான கல்வி முதல் முதியோருக்கான உதவித் தொகை வரையிலான திட்டம் உள்ளது. இதனால் வடசென்னையில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்" என்றார். 

கழிவு நீர் தேங்கியிருந்ததைப் பார்த்த வேட்பாளர் காளியம்மாள்

வேட்பாளர் காளியம்மாள் 52 வது வார்டு சிங்காரத்தோட்டம், 5 -வது தெருவில் நேற்று இரவு வாக்குசேகரித்தார். அப்போது அங்கு கழிவுநீர் நீண்ட நாள்களாக தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் வேட்பாளரிடம் கூறினர். உடனடியாக விவரத்தைக் கேட்டறிந்த அவர், சம்பந்தப்பட்ட குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளை சம்பவ இடத்திலிருந்தே போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் ஹலோ சார், ``நான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் பேசுகிறேன். இந்தப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுங்கள். நான், வேண்டும் என்றால் எழுத்துபூர்வமாக நாளை காலை உங்களுக்கு புகார் கொடுக்கிறேன். மேலும், கழிவு நீர் தேங்கி நிற்பதை படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கிறேன் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா, நடவடிக்கை எடுங்கள்” என்று கூறினார். அதைக் கேட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

வேட்பாளர் காளியம்மாளின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். எந்தவித ஆராவாரம் இல்லாமல் வடசென்னையின் நாம் தமிழர் வேட்பாளர் செய்யும் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.