`அவர் நல்லவர்; அவர் சொல்வது பலிக்கும்' - தி.மு.க.வில் யாரைச் சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்? | panneer selvam campaign for candidates

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:14:00 (06/04/2019)

`அவர் நல்லவர்; அவர் சொல்வது பலிக்கும்' - தி.மு.க.வில் யாரைச் சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

பிரசாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

``ஆற்காடு வீராசாமி நல்லவர்'' என்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் புளியந்தோப்பில் நடந்த பிரசாரத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய சென்னை தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து துணை முதல்வரும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது. 

``ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தமிழ்நாட்டை தீ வைத்து கொளுத்திவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள்தான் மாமன் மச்சான் சண்டையில் தீ வைத்து கொளுத்தினீர்கள். அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. நாங்கள் பாவம். ஜெயலலிதா சொன்ன திட்டங்களை செயல்படுத்துவதில் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வருகிறோம். ஜெயலலிதா தெய்வமாக இருந்து, இந்தப் பசங்க 2014-ல் நாம கஷ்டப்பட்டு அமைத்த ஆட்சியை எப்படி நடத்துகிறார்கள் என்று மேலே இருந்து பார்த்து வருகிறார்கள். அந்த பயத்தில் ஒவ்வொரு வேலையாக நாங்கள் செய்து வருகிறோம், அம்மா கொடுத்ததைவிட கூடுதலாக கொடுத்துவருகிறோம். பொங்கலுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். 

 பன்னீர்செல்வம் பிரசாரத்துக்கு காத்திருந்த பொதுமக்கள்

ஆற்காடு வீராசாமி நல்ல மனிதர். அவர் சொல்வதுஅப்படியே பலிக்கும். (கூட்டத்தில் இருந்தவர்கள் இன்வெட்டரை கண்டுபிடித்தவர் ஆற்காடு வீராசாமி என்று சத்தம் போட்டனர்)  தி.மு.க-வினர் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுப்பது இல்லை. பரோட்டா சாப்பிட்டாலும் காசு கொடுப்பது இல்லை. இப்படி வன்முறைக் கலாசாரத்தை வேரூன்ற வைத்ததே தி.மு.க தான். ஆனால் நாம், ஒருதாய் மக்களாக வாழ்ந்துவருகிறோம். சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாப்பு தருகிற மாநிலம் தமிழகம்'' என்றார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புளியந்தோப்பு பகுதிக்கு நேற்று இரவு 7மணிக்கு பிரசாரத்துக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் மாலை 6 மணி முதல் காத்திருந்தனர். ஆனால், அவர் வர காலதாமதமாகியதால் பொதுமக்கள் சோர்வடைந்தனர். ஒருவழியாக இரவு 9.30 மணியளவில் புளியந்தோப்பு பகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். சோர்வடைந்த பொதுமக்கள் பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்தனர். பிரசாரம் முடிந்தபிறகு பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.