திருவாரூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு - பருத்தி நிலத்தில் படர்ந்த கச்சா எண்ணெய் | ONGC pipes damaged in thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:15:00 (06/04/2019)

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு - பருத்தி நிலத்தில் படர்ந்த கச்சா எண்ணெய்

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் விளைநிலம் வழியாகச் செல்லும் ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் குழாய் உடைந்து பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்த விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் பரவி விவசாய நிலம் சேதமடைந்துள்ளது.

ஓ.என்.ஜி.சி

டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கச்சா எண்ணெய்க் கிணறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாகத் திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கச்சா எண்ணெய்க் கிணறுகள் அமைத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகள் இருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் உறுதியாக உள்ளது ஓ.என்.ஜி.சி அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே எருக்காட்டூரில் 8-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்களை சுத்திகரிப்பதற்காக விவசாய நிலங்கள் வழியாக அருகே உள்ள வெள்ளக்குடி சுத்திகரிப்பு ஆலைக்குக் கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்வதற்கு விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் திடீரென வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறி விளைநிலங்களை முற்றிலும் சேதப்படுத்திவிடுகின்றன. சென்ற ஆண்டு இதே ஊரில் ஓ.என்.ஜி.சி  குழாய் உடைந்து விளைநிலங்கள் சேதமடைந்தன.

குழாய் உடைப்பு

அதைப்போல் இன்று காலை எருக்காட்டூரில் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்த விளைநிலத்தின் வழியே சென்ற ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து பரவிய கச்சா எண்ணெயால் விளைநிலம் முற்றிலும் சேதமடைந்தது.
இதுமட்டுமல்லாமல் வெளியான கச்சா எண்ணெயால் அந்த இடங்கள் இனி விவசாயம் செய்வதற்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளது. இதுபற்றி விளைநிலத்தின் சொந்தக்காரரான செல்வராஜிடம் கேட்டபோது, ``நான் பருத்தி போட்டுருக்கேன். அதனால் தினமும் காலையில வயலுக்கு வருவேன். அதைப்போல்தான் இன்னைக்கு காலையிலும் வயலுக்கு வந்தேன். வந்து பார்த்தபோது  ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து வயல் முழுசா பரவிகிட்டு இருந்துச்சு. உடனே நான்  ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னேன். அதிகாரிகளும் வந்தாங்க. ஆனா வந்த உடனே போனில் போட்டோவோ வீடியோவோ எடுக்கக்கூடாது. யாருக்கும் சொல்லக்கூடாது உங்க வேலையை நீங்க பாருங்க எங்க வேலையை நாங்க பாக்குறோம்னு கண்டித்துச் சொல்லிட்டாங்க அதிகாரிகள்.

குழாய்

இந்த ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்புக்கு நிறுவனம் என்னதான் ஆண்டுதோறும் எங்களுக்கு வாடகை கொடுத்தாலும் இதுபோன்ற விபத்துகளால் சாகுபடி செய்துள்ள நெல் மற்றும் பருத்திப் பயிர்கள் சேதம் அடைந்து வருவது மன வேதனையை ஏற்படுத்துது. இதற்கு சரியான இழப்பீடும் அவங்க வழங்குவது இல்லை.

கச்சா எண்ணெய் பரவிய நிலத்தை மீண்டும் சாகுபடிக்கு ஏற்ப பண்படுத்துவற்கு ஏற்றாற்போல் புதிய மண் மாற்றித் தர வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாக வைக்கிறேன்” என எண்ணெய் படர்ந்த வயலைப் பார்த்து உருக்கமாகக் கூறினார்.