`தண்ணீர்த் தொட்டியில் சடலமாக மிதந்த 2 குழந்தைகள்!’ - பேரணாம்பட்டில் மீளமுடியாத சோகம் | 2 children floating in a water tank - tragedy in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:15:30 (06/04/2019)

`தண்ணீர்த் தொட்டியில் சடலமாக மிதந்த 2 குழந்தைகள்!’ - பேரணாம்பட்டில் மீளமுடியாத சோகம்

பேரணாம்பட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், மூடப்படாமல் இருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பலியான குழந்தைகள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரின் மகன் புவனேஸ் (4), அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்துவந்தான். புவனேஸின் வீட்டருகே சுரேஷ் என்பவர் புதியதாக வீடு கட்டிவருகிறார். முழுப் பணிகள் முடிந்த நிலையில், இன்னும் குடித்தனம் வரவில்லை. இந்த நிலையில், புதிய வீட்டின் அருகே  நேற்று மாலை குழந்தை புவனேஸ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் இரண்டரை வயதுக் குழந்தை மதிலேஷ் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. பதறிய பெற்றோர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். பின்னர், சந்தேகமடைந்து நள்ளிரவில் புதிய வீட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டியைப் பார்த்தனர். இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல்களை மீட்டுக் கட்டித்தழுவி கதறி அழுதனர். தகவலறிந்ததும், பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீஸார் சம்பவப் பகுதிக்கு விரைந்துவந்தனர்.

குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இன்று காலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இரண்டு குழந்தைகளும் புதிய வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு மூடப்படாமல் இருந்த தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்துள்ளனர். அந்த நேரத்தில் யாரும் இல்லாததால், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரியவந்திருக்கிறது. இது சம்பந்தமாக, போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.