`இறக்குமதி செய்யப்பட்டவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ - ஆண்டிபட்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு | palanisamy attacked EVKS elangovan

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (06/04/2019)

கடைசி தொடர்பு:15:22 (06/04/2019)

`இறக்குமதி செய்யப்பட்டவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ - ஆண்டிபட்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தேனி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

பழனிசாமி

காலை 10.45 மணிக்கு, எடப்பாடி பழனிச்சாமி ஆண்டிபட்டி வருவதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், 12 மணிக்குதான் ஆண்டிபட்டி வந்தார். அதுவரை கொழுத்தும் வெயிலில் மக்கள் காத்துக்கிடந்தனர். பின்னர், ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே வந்த எடப்பாடி, ``சிலரின் துரோகத்தால்தான், சூழ்ச்சியால்தான் ஆண்டிபட்டிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்தத் தேர்தல் மூலமாக துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால்தான், நாம் ஆண்டிபட்டியில் நிம்மதியாக வாழ முடியும்.

பழனிசாமி

தி.மு.க கூட்டணியில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாரே... அவர் இறக்குமதிசெய்யப்பட்டவர். இறக்குமதிசெய்யப்பட்ட வேட்பாளருக்கு ஓட்டுப்போடாதீர்கள். இந்த மண்ணின் மைந்தன், தேனி மாவட்டத்தின் பிரச்னைகளைத் தெரிந்த ரவீந்திரநாத்குமாருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூறி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மறைமுகமாகத் தாக்கிப்பேசினார். 

மேலும் அவர், "தங்க தமிழ்ச்செல்வன் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்காமல், சொகுசு ஓட்டலில் நீச்சல் அடிக்கவும், வாக்கிங் போகவும், அமெக்காவில் பிறந்தவர் மாதிரி நடந்துகொள்கிறார்" என்று பேசினார். பிரசார வாகனத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் ஆகியோர் உடனிருந்தனர். ஆண்டிபட்டியில் ஆரம்பித்த பிரசார பயணம், கானாவிலக்கு, கண்டமனூர், கடமலைக்குண்டு, சின்னமனூர் வழியாக தேவதானப்பட்டியில் நிறைவடைகிறது.