நாம் தமிழர் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி! - படுக தேச பார்ட்டியுடன் கைகோத்த சீமான் | Naam Thamizar Katchi extends support to paduga desam Party

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:15:45 (06/04/2019)

நாம் தமிழர் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி! - படுக தேச பார்ட்டியுடன் கைகோத்த சீமான்

நீலகிரியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிமேகலையின் வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில், படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

சீமான்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களின் பெயரில், 'படுக தேச பார்ட்டி' என்ற கட்சி செயல்பட்டுவருகிறது. முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தனித் தொகுதியான நீலகிரியில், B.C பட்டியலில் வரும் படுகர்கள் யாரும் வேட்பாளர்களாகப் போட்டியிட முடியாது.எனவே, அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற வேட்பாளரை படுக தேச பார்டி ஆதரித்து, சுயேச்சையாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அவருக்கு கைத்தடி சின்னம் வழங்கப்பட்டது.

படுகர் கட்சி

இந்த நிலையில், நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மணிமேகலை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர், வேட்புமனு தாக்கலின்போது சில ஆவணங்களை இணைக்காதது, ஆவணங்களில் கையெழுத்து இல்லை என்பன போன்ற காரணங்களால் அவரது வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.இந்த நிலையில்,  நீலகிரி தொகுதியில் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளர் சுப்பிரமணியத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான கடிதத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படுக தேச பார்ட்டி நிறுவனர் மஞ்சை மோகனிடம் வழங்கியுள்ளார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படுக தேச பார்ட்டி வேட்பாளர் சுப்பிரமணியத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படுக தேச பார்ட்டியினர், மக்கள் கூடும் இடங்கள், அரசு பேருந்துகள் எனப் படுகர் இன மக்களிடம் தீவிர பிரசாரம் செய்துவருகின்றனர்.