அமைச்சராகச் சொல்லி அண்ணா பாராட்டிய சிலம்பொலி சு. செல்லப்பன்! | Special article about Silamboli Su.chellappan

வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (06/04/2019)

கடைசி தொடர்பு:15:41 (06/04/2019)

அமைச்சராகச் சொல்லி அண்ணா பாராட்டிய சிலம்பொலி சு. செல்லப்பன்!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவியாம்பாளையம் என்ற ஊரில் 1928ல் பிறந்தவர், சிலம்பொலி. சு. செல்லப்பன். கணித ஆசிரியராகத் தன்னுடைய பணியைத் தொடங்கினார். தமிழிலக்கியங்கள்மீது கொண்ட ஆர்வத்தினால், தமிழிலும் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

சிலம்பொலி

 

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்குறித்து இவர் ஆற்றிய தொடர் உரைகள் கவனிக்கத்தக்கவை. ராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் 1953-ம் ஆண்டு, சிலப்பதிகாரம் தலைப்பில் சு. செல்லப்பன் ஆற்றிய உரையைக் கேட்ட சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை, சிலம்பொலி என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிலப்பதிகாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல அரும்பாடுபட்டு உழைத்தவர் சிலம்பொலி. சு. செல்லப்பன். சிலப்பதிகாரம் பற்றி முழுமையாக ஆய்வுசெய்து சிலம்பொலி என்னும் தலைப்பில் 1975ல் ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி, ``அவர் நூலை வெளியிட்ட பிறகு, சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்ல, அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்கு சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுநர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்'' என இவரைப் பாராட்டினார். 

சிலம்பொலி

சிலம்பொலி, சங்க இலக்கியத் தேன், பெருங்கதை ஆராய்ச்சி உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். 'சிலம்பொலியாரின் அணிந்துரைகள்' எனும் இவரது நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் 2006-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் ' திறனாய்வு'எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற சிறப்புக்குரியதாகும். உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் எனப் பல பணிகளையும் ஆற்றியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் விருது, அணிந்துரை செம்மல் விருது எனப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களைப் போற்றிப் பெருமை சேர்த்திட வேண்டும் என்ற ஆசையில், பேரறிஞர் அண்ணா அவர்கள், சிலம்பொலியாரை சட்டமன்றத் தேர்தலில் நின்று அமைச்சராகிடுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார். அந்நாளில் அந்த வாய்ப்பினை அவர் மறுத்ததால், நாமக்கல் வட்டாரத்தில் இருந்து பாவலர் முத்துசாமி ( சிலம்பொலியாரின் உறவினர்) அவ்வாய்ப்பினைப் பெற்றார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.