`ஹவுஸ் ஓனரின் அலட்சியத்தால் மனைவியையும் மகளையும் இழந்துவிட்டேன்'- விபத்தால் கதறும் கணவர் | Mother and daughter died as house roof falls

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:12 (06/04/2019)

`ஹவுஸ் ஓனரின் அலட்சியத்தால் மனைவியையும் மகளையும் இழந்துவிட்டேன்'- விபத்தால் கதறும் கணவர்

 சங்கீதாவின் கணவர் கதறல்

சென்னை புளியந்தோப்பு பகுதியில், வீட்டின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்துவிழுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த தாயும் மகளும் பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஹவுஸ் ஓனர்தான் காரணம் என்று இறந்த பெண் சங்கீதாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை புளியந்தோப்பு  வெங்கடேசபுரம் காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சங்கீதா (31) நர்ஸ். இவர்களுக்கு யுவஸ்ரீ (8 ) என்ற மகளும் கிருஷ்ணகுமார் (4) என்ற மகனும் உள்ளனர். யுவஸ்ரீ, தனியார்ப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவந்தார். வழக்கம்போல நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீட்டில் தூங்கினர். அப்போது, டமார் என்ற சத்தம் கேட்டு வெங்கடேசன் கண்விழித்தார். இருட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. உடனடியாக மின்விளக்கை ஆன் செய்த வெங்கடேசனுக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 

கட்டட இடிபாடுகளை அதிர்ச்சியோடு பார்க்கும் கணவர்

வீட்டின் மேற்கூரை இடிந்து  தூங்கிக்கொண்டிருந்த சங்கீதா, யுவஸ்ரீ ஆகியோர் மீது விழுந்து கிடந்தது. இதனால், அவசர அவசரமாக அவற்றை அகற்றினார். காயமடைந்து உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். நள்ளிரவில் வெங்கடேசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்களும் வெங்கடேசனுக்கு உதவிசெய்தனர். 

 சங்கீதாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் யுவஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

கட்டட இடிபாடுகளை அதிர்ச்சியோடு பார்க்கும் கணவர்

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், ``வீட்டின் உரிமையாளரிடம் வீட்டின் மேற்கூரை சரி இல்லை என்று ஓராண்டாகக் கூறிவந்தேன். அவரும் சரிசெய்து கொடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால் செய்யவில்லை. இதனால்தான், இன்று என் மனைவியையும் மகளையும் பறிகொடுத்துவிட்டு அநாதையாக நிற்கிறேன். நல்லவேளை, என் மகன் என்னுடன் கட்டிலில் படுத்திருந்தான். இல்லையென்றால் இவனையும் இழந்திருப்பேன்" என்றார் கண்ணீர் மல்க. 
 
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, வெங்கடேசனின் வீட்டுக்கு வந்த மூதாட்டி ஒருவர் தெருவில் அமர்ந்தபடி கதறி அழுதார். `யுவஸ்ரீயை இனிமேல் நான் எப்போது பார்ப்பேன். அவள் எனக்கு உயிர்' என்று கதறினார். மூதாட்டியின் கதறல், அங்குள்ளவர்களைக் கண்கலங்க வைத்தது. 

நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து தாயும் மகளும் இறந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.