ஆண்டிபட்டி பிரசாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி! | CM EPS election campaign in Andipatti

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (06/04/2019)

ஆண்டிபட்டி பிரசாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தல், தேனி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆண்டிபட்டியில் பிரசாரம்செய்தார். அப்போது, வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இதனைக்கண்டு ஆண்டிபட்டி மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தில் இருந்து  47 கிலோமீட்டர் தூரம் பைப் அமைத்து, தெப்பம்பட்டி கண்மாய் வழியாக ஆண்டிபட்டியின் 152 கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்கப்படும். வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட 30 ஊராட்சிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படும்.

கோதாவரி − காவிரி இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்போது, ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தப்படும். பேபி டேம் பலப்படுத்தப்பட  ஏழரைக் கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு, எந்த பணியையும் கேரள அரசு செய்யவிடவில்லை. நமது படகு ஒன்றிற்கு முல்லைப் பெரியாறு ஏரியில் இயக்க லைசென்ஸ் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். அதில் வெற்றிபெற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது எனது முதல் கடமை.

நீர் மேலாண்மைக்காக, ஓய்வுபெற்ற பொறியாளர்கள் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் ஆய்வுசெய்துவருகிறது. அதன்படி, தண்ணீர் வீணாகும் இடங்களில் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர் அதிகரிக்கப்படும். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 3000 ஏரிகள் தூர்வாரியிருக்கிறோம். பேரூராட்சியாக இருக்கும் ஆண்டிபட்டி நகராட்சியாகத் தரம் உயர்த்தம்படும். வருசநாடு வாலிப்பாறை பகுதி மலைகிராம மக்களுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்'' என்றார். இவ்வளவு வாக்குறுதிகளை அள்ளிவீசியதும் ஆச்சர்யத்தில் திகைத்தனர் ஆண்டிபட்டி மக்கள்.

``முதலில் பக்கத்தில் இருக்கும் முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் கொடுக்க வழிசெய்யுங்கள். பின்னர் கோதாவரி தண்ணீரை ஆண்டிபட்டிக்குக் கொண்டுவரலாம்'' என கொஞ்சம் சத்தமாகவே கமென்ட் அடித்தனர் மக்கள்.