`பூத்துல நாமதான் இருப்போம்!' - சர்ச்சைப் பேச்சால் வழக்கில் சிக்கிய அன்புமணி | anbumani controversy speech about election booth

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (06/04/2019)

கடைசி தொடர்பு:15:42 (06/04/2019)

`பூத்துல நாமதான் இருப்போம்!' - சர்ச்சைப் பேச்சால் வழக்கில் சிக்கிய அன்புமணி

அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்த அன்புமணி ராமதாஸ், “பூத்தில் நாம் மட்டுமே இருப்போம். அப்போது என்ன செய்ய வேண்டும் புரியுதா?” என கள்ள ஓட்டு போடும் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, தி.மு.க-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அன்புமணி மீது வழக்குப் பதிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ், திருப்போரூர் இடைத் தேர்தல் பிரசாரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்காக வாக்கு சேகரிப்பதற்காகக் கடந்த 4-ம் தேதி, அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது பேசிய அன்புமணி, “இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். இப்போது, முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். நாம் எல்லோரும் கூட்டணியில் சேர்ந்ததற்குக் காரணம், தமிழகத்தில் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். இங்கே, அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும். மத்தியில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

நல்ல திட்டங்கள் உங்களுக்கு வர வேண்டும் என்பதற்காக எல்லோரும் சேர்ந்து கூட்டணி உருவாக்கியிருக்கிறார்கள். மேடையில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஓட்டு வங்கி உள்ள கட்சிகள். அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, த.மா.கா. புதிய நீதிக் கட்சி என எல்லா கட்சிக்கும் ஓட்டு வங்கி உள்ளது. எதிரணியில் தி.மு.க-விற்கு கொஞ்சம் ஓட்டு இருக்கிறது. கூட இருக்கும் எந்தக் கட்சிக்கும் ஓட்டு கிடையாது. அப்ப, தேர்தலின்போது என்ன நடக்கும்… பூத்துல நாமதான் இருப்போம். சொல்றது புரியுதா, இல்லையா?” என்று நிறுத்த, தொண்டர்கள் ஆரவாரமாக விசில் அடித்தனர். மீண்டும் தொடர்ந்தவர், “நாமதான் இருப்போம்! நாமதான் இருப்போம்! சொல்லணுமா வெளியில, புரிஞ்சுதுல்ல… அவ்வளவுதான்… முடிஞ்சுபோச்சு! ரெண்டு பேரும் ஜெயிச்சுட்டாங்க! எதிரணியிலே இதையெல்லாம் கேட்குறதுக்கு அளில்லை. இதையெல்லாம் மனதிலே வையுங்கள்” என்றார்.

சர்ச்சைக்குரிய அன்புமணியின் பேச்சு, சமூக வலையதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதைத் தொடர்ந்து, தி.மு.க-வினர் மாவட்ட தேர்தல் அலுலவரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா, அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க