``ஓட்டுக்கு காசு வாங்காதீங்க..!" அப்பா, அம்மாவுக்கு பள்ளி மாணவர்களின் கடிதம் | dont get money for vote'' students who wrote letters to their parents

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (07/04/2019)

கடைசி தொடர்பு:16:49 (07/04/2019)

``ஓட்டுக்கு காசு வாங்காதீங்க..!" அப்பா, அம்மாவுக்கு பள்ளி மாணவர்களின் கடிதம்

``ஓட்டுக்கு காசு வாங்காதீங்க..!

தேர்தல் திருவிழாவின் கொண்டாட்ட மகிழ்ச்சியில் இந்தியாவே மூழ்கியுள்ளது. வீதிகளில் அனல் பறக்கும் பிரசாரங்கள் ஒரு புறம், தொலைக்காட்சிகளில் வாக்கு வாதங்கள் மறுபுறம் என, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நாள்கள் செல்கின்றன. ஆனால், கடந்த 2014 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், இந்திய அளவில் வாக்களித்தோரின் சதவிகிதம் 66.38 தான். இந்த நிலையை மாற்றி, வாக்குரிமையைப் பயன்படுத்தி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் விளம்பரங்கள் செய்துவருகிறது. அவர்களுக்கு உதவியாக, தன்னார்வ அமைப்புகளும், பள்ளிகளும் தங்களால் இயன்ற அளவு தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை பரப்புரை செய்துவருகின்றன. திருவண்ணாமலை ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களும் வாக்களிக்கும் அவசியம் பற்றி பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

மாணவர்கள்

அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமியிடம் பேசியபோது, ``தேர்தல் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தி, எங்கள் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ஒலிபெருக்கி மூலம், வாக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தைப் பேசிக்கொண்டும் சென்றனர். எங்களின் நடைப்பயணத்தில் எட்டிமரத்தூருக்குப் போகும்போது, மாலை நேரமாகி விட்டது. அதனால், நிறைய பேர் அங்குக் கூடியிருந்தனர். அந்த இடத்தில் மாணவர்கள் பேசும்போது, ``தேர்தலில் ஓட்டு போடுவது நமது அடிப்படை உரிமையைப் பதிவு செய்வது. அதனால், வேறு எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓட்டு போட போங்க." என்றனர். 

மாணவர்கள்

இன்னும் சில மாணவர்கள் எங்கள் ஊரின் பிரச்னையைப் பற்றியும் பேசியதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டனர். ``நாம் வசிப்பது மலைப் பகுதியில். இங்கே எங்க கூட படிக்கிற பசங்களோட அப்பா அம்மா, பல பேரு கேரளா மாதிரி வெளியூருக்கு வேலைக்குப் போகிறார்கள். அதனால், பல நேரங்களில் தங்கள் பிள்ளைகளைக் கூப்பிட்டுச் செல்வதால் பள்ளிக்கு அதிக நாள் லீவு எடுக்கிறார்கள். அதனால், படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, நம் மலைப் பகுதியில் வேலை வாய்ப்பு அதிகமாகவும், நல்ல திட்டங்கள் வரவும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என யோசித்து வாக்களியுங்கள்" என்று பேசியதைக் கேட்ட ஊர் மக்கள் பாராட்டி விட்டு, ``உங்களுக்ககவே நிச்சயம் ஓட்டு போட போவோம்" என்றனர். அவர்கள் அப்படிச் சொன்னது மாணவர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பினர். 

எங்களின் நடைப் பயணத்துக்கு முன், பள்ளி மாணவர்களை தேர்தலைப் பற்றி அவரவர் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னேன். `அவசியம் ஓட்டு போட போங்க", ``ஓட்டளிக்கக் காசு வாங்காதீங்க", "யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்தித்து, நல்ல முடிவாக எடுத்து வாக்களியுங்கள்" என்றும் தங்கள் கடிதங்களில் எழுதியிருந்தனர். தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பதால் மாணவர்கள் நாட்டு நடப்பைப் பற்றித் தெரிந்துவைத்துள்ளனர். மாணவர்களின் இந்த லெட்டர் எழுதும் முறை அவர்களின் பெற்றோர்களிடம் நல்ல மாற்றத்தைத் தந்துள்ளது. ஒரு மாணவரின் அம்மா போன் செய்து, மகனின் லெட்டர் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். 

தேர்தல் என்பது நமது தேவைகளை நிறைவேற்றும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழி. அதைப் பொதுமக்கள் தவற விடக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். அதனால்தான் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனும் அழைப்பை தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து தெரிவிக்கிறது. அவர்களுக்கு உதவும் விதமாக எங்களின் இந்தப் பயணம் அமைந்தது மகிழ்ச்சி" என்கிறார்.  


டிரெண்டிங் @ விகடன்