`ஜெயலலிதா ஆட்சியா நடத்துறீங்க, அவரது ஆவிகூட உங்களை மன்னிக்காது!'- கி.வீரமணி விமர்சனம் | K Veeramani slams ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (06/04/2019)

`ஜெயலலிதா ஆட்சியா நடத்துறீங்க, அவரது ஆவிகூட உங்களை மன்னிக்காது!'- கி.வீரமணி விமர்சனம்

"ஜெயலலிதா ஆவியின் வழிகாட்டுதல்படி ஆட்சி நடத்துவதாகக் கூறும் ஆட்சியாளர்களை அவரது ஆவிகூட மன்னிக்காது" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்தார்.

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, திராவிடர் கழகம் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசுகையில், ”தமிழகத்தில் பா.ஜ.க 5 தொகுதிகளில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்தாவது நோட்டாவை வென்று டெபாசிட் பெற வேண்டும் என முயற்சிசெய்கிறது. கொள்கைக் கூட்டணி மற்றும் கொள்ளைக் கூட்டணிகளுக்கிடையே போட்டி உள்ளது.

                                                    

இந்தத் தேர்தலில் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார். அவருடன் உள்ள எடப்பாடியும் வீட்டுக்கு அனுப்படுவார். இடைத்தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் அடிமை அரசும் இருக்காது. மோடியா லேடியா என்றவரின் கட்சியோடு தற்போதைய அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதா ஆவியின் வழிகாட்டுதல்படி ஆட்சி நடத்துவதாகக் கூறும் இவர்களை ஆவிகூட மன்னிக்காது. எங்களைப் பொறுத்தவரை ஆவியும் வேண்டாம், மோடியும் வேண்டாம். அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் அடகு வைத்துவிட்டார்கள். 'இந்தியாவைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கமே எங்கள் கூட்டணியின் முழக்கமாக உள்ளது. பசுவிற்கு உள்ள பாதுகாப்பு மனிதனுக்கு இல்லை. தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்ற முடியாது.

                                                

பா.ஜ.க ஆட்சியில் நாலரைக் கோடி பேர் வேலை இழந்துள்ளனர். விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் என்ற மோடியின் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், கடந்த 2014-15-ம் ஆண்டில் 22 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளது. தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள நிலையை அறிந்ததால், ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள். நாங்கள் மிசாவையே  பார்த்தவர்கள். இதுவெல்லாம் சும்மா. சாமியார்களின் ஆசிரமத்தின் உள்ளே சென்றால், கருக்கலைப்பு செய்ய மருத்துவமனை வைத்துள்ளார்கள். அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. ராணுவத்தின் தியாகத்தை சுயநலனிற்காக மோடி பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சிகள்மீது வருமான வரித் துறை ஏவப்படுகிறது.

                                                           

ஆளுங்கட்சியினர்மீது வருமானத் துறை சோதனை செய்யாதது ஏன். பா.ஜ.க அரசு ஆகாயத்தில் ஊழல் செய்தது என்றால், எடப்பாடி அரசு தரையில் ஊழல் செய்கிறது. எனவே, ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறவும் மக்கள் பாகுபாடின்றி வாழவும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையவும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.