அ.தி.மு.க கோஷ்டி பூசலில் சிக்கித்தவிக்கும் கடலூர் பா.ம.க வேட்பாளர்! | Cuddalore PMK Candidate upset over admk clash

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:19:30 (06/04/2019)

அ.தி.மு.க கோஷ்டி பூசலில் சிக்கித்தவிக்கும் கடலூர் பா.ம.க வேட்பாளர்!

அ.தி.மு.க கோஷ்டி பூசலில் சிக்கி, கடலூர் பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமி தவித்துவருகிறார். 

அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க-வின் டாக்டர் ஆர். கோவிந்தசாமி போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் போட்டியிடுகிறார். பா.ம.க வேட்பாளர் டாக்டர். கோவிந்தசாமி, அ.தி.மு.க-வை நம்பி களத்தில் உள்ளார். அதுவும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் வழிகாட்டுதலின்படிதான் தேர்தல் பணியாற்றிவருகிறார். கடலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் அமைச்சர் எம்.சி. சம்பத் தனியாகவும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.பி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோர், தனி அணியாகவும் செயல்பட்டுவருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் தனியாகச் செயல்பட்டுவருகிறார். அ.தி.மு.க-வில் நிலவும் இந்த கோஷ்டி
பூசல், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வில் போட்டியிடும் டாக்டர் கோவிந்தசாமி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி வேட்புமனு தாக்கல்செய்த அன்றே பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம்
பாதியில் வெளியேறினார். வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பனை சந்திக்கச் சென்றபோது,
அவர் அமைச்சர் சம்பத்தை விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தின்போது, அமைச்சர் எம்.சி. சம்பத், அருண்மொழித்தேவன் கலந்துகொள்கிறார் எனப் பாதியில் திரும்பிச்சென்றுள்ளார். அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்துகொள்கிறார் என அருண்மொழித்தேவன் கலந்துகொள்ளவில்லை. மொத்தத்தில் இருவரும் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லை. இவர்களின் கோஷ்டி பூசலில் பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமி சிக்கித்தவித்துவருகிறார். 

இதுகுறித்து பா.ம.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், `பா.ம.க. வேட்பாளர் முழுவதும் அ.தி.மு.க-வை நம்பி களத்தில் உள்ளார். அவர்களிடம் உள்ள கோஷ்டி அரசியல் எங்களுக்கு  தர்மசங்கடத்தை ஏற்படுத்திவருகிறது. தொகுதியில் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க என கூட்டணி பலமாக உள்ளோம். அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் இணைந்து பணியாற்றினால் வெற்றி நிச்சயம்''
என்றார்.