மேகமலையில் ஆண் புலி உயிரிழப்பு! – வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு | A male tiger death in the forest of Magamalai

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/04/2019)

கடைசி தொடர்பு:07:00 (07/04/2019)

மேகமலையில் ஆண் புலி உயிரிழப்பு! – வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

மேகமலை வன உயிரினச் சரணாலயத்தில் ஆண் புலி ஒன்று இறந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. வன உயிரின சரணாலயத்தில் அப்பர் மணலாறு என்ற இடம் உள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான இங்கு, கேரள வனப் பகுதியில் கேரள வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, தமிழக வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகத் தேனி மாவட்ட வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த மேகமலை வன உயிரின சரணாலய அதிகாரிகள், இறந்து மூன்று நாள்கள் ஆன சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண்புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தனர்.

பின்னர், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு இன்று வந்த மதுரை முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே, தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், கெளரவ வன உயிரின காப்பாளர் டாக்டர் ராஜ்குமார்  உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர். அசோகன், டாக்டர்.  கலைவாணன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர்  இறந்த புலியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தனர்.

இறந்த புலியை விட வயது மூத்த புலி உடனான சண்டையில் இந்த புலி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான காயங்கள் இறந்த புலியின் உடலில் இருப்பதாகவுக் கூறினர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட புலியின் உடல், அதிகாரிகள் அனைவரது முன்னிலையில் தீயிட்டு எரிக்கப்பட்டது.