``இந்த இக்கட்டான சூழலில் என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள்'' - கிரண்பேடி உருக்கம்! | pray for my family says kiran bhedi

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (07/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (07/04/2019)

``இந்த இக்கட்டான சூழலில் என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள்'' - கிரண்பேடி உருக்கம்!

`இந்த இக்கட்டான சூழலில் என் குடும்பத்திற்காக பிரார்த்திக் கொள்ளுங்கள்'' என்று புதுவை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்து அவரின் பேத்தி யூ டியூப்பில் வெளியிட்டிருந்த வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் “நான் கிரண் பேடியின் ஒரே பேத்தி. கிரண் பாட்டி... அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம், ‘நான் உங்கள் பிரச்னைகளுக்கு நடுவில் வரமாட்டேன் என்று சொன்னீர்களே... இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் ? நானி... நீங்கள் ஏன் என் அப்பாவையும், அவருடைய நண்பர்களையும் போலீஸை வைத்து கஷ்டப்படுத்துகிறீர்கள் ? என்னை யாரும் கடத்தவுமில்லை, கொடுமைப்படுத்தவும் இல்லை. என் அப்பாவுடன் தான் நான் இருக்கிறேன். அம்மா... உங்களை நினைத்தும், நானியை நினைத்தும் நான் வெட்கப்படுகிறேன்” என்று பேசியிருந்தார்.

கிரண்

அந்த வீடியோ குறித்து நம்மிடம் பேசிய கிரண் பேடி, “இது எப்போதோ முடிந்து போன விவகாரம். யூ டியூப்பில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நீதிமன்றம் கொடுத்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழந்தை இப்போது விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நான் பார்க்கவில்லை. ஆனால் வழக்கறிஞர் மூலம் அவளுக்கு தெரிவித்து விட்டேன். குழந்தையின் தலையீட்டால் இது மிகவும் உணர்ச்சிகரமாக மாறியிருப்பதால் இதுகுறித்து கருத்துகள் கூறவோ, எழுதுவதோ பொருத்தமாக இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.

 தனது  வாட்ஸ் அப் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அந்த வீடியோ பதிவை பார்த்து என் குடும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்து இருப்பீர்கள். நானும் அதிர்ச்சியடைந்தேன். இது என் மகளுடைய வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் இதுகுறித்து பொதுவெளியில் பகிர்வதில் இருந்து என்னைக் கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன். வாழ்வின் வித்தியாசமான ஒரு பகுதியை நான் இப்போது அனுபவித்து வருகிறேன். இந்த நிலை யாருக்கும் வர கூடாது. ஒவ்வொரு முறையும் அவர்கள் நடந்து கொண்ட விதங்களையும், அவர்கள் கூறியவைகளையும் நான் மன்னித்து வருகிறேன். அவள் (தனது மகளைக் குறிப்பிடுகிறார்) தன் வாழ்க்கையில் நேர்மையையும், நம்பிக்கையையும் கொண்டவள். அந்தப் பெண்ணை தாக்கி பாவத்தை சுமக்காதீர்கள். இந்த இக்கட்டான சூழலில் என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள்” என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க