‘ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அவரின் தாயே ஏற்கமாட்டார்!’ - ராமதாஸ் கிண்டல் | sonia gandhi will not accept rahul as prime minister says Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (07/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (07/04/2019)

‘ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அவரின் தாயே ஏற்கமாட்டார்!’ - ராமதாஸ் கிண்டல்

‘‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அவரின் தாய் சோனியா காந்தியே ஏற்கமாட்டார்’’ என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டல் செய்தார்.

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்குசேகரித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 6-ம் தேதி மாலை வாக்கு சேகரித்தார். குடியாத்தத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘‘தி.மு.க-வினர் கதைவிடுகிறார்கள். அந்தக் கட்சியில் இருக்கும் ஒரு ஆளு போதும், ஊரையே கெடுத்துவிடுவார். பா.ம.க, அ.தி.மு.க-வினருக்கு சூதுவாது தெரியாது. தமிழ் தமிழ் என்று பேசும் தி.மு.க-வினர் தான், ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தடங்கலாக இருக்கிறார்கள். காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தான் நீட் தேர்வை கொண்டுவந்தது. கிராமப்புற ஏழை மாணவர்களை பாதிக்கச் செய்யும் நீட் தேர்வு கட்டாயம் நீக்கப்படும். வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும். கருத்துக்கணிப்பில், பா.ஜ.க இடம்பெற்ற கூட்டணி நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரியவந்திருக்கிறது. மோடி தான் மீண்டும் பிரதமர். தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் தோல்வியடையும் என்று தெரியவந்திருக்கிறது. 

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்குசேகரித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று அவரின் அம்மா சோனியா காந்தி கூடச் சொல்லமாட்டார். மு.க.ஸ்டாலின் தாறுமாறாகப் பேசுகிறார். நாகரிகமில்லாமல், முதல்வரை மண்புழு என்கிறார்.  கூட்டணிக்குப் பா.ம.க வரவில்லை என்கிற கோபம் இன்னும் அவருக்குத் தணியவில்லை. இப்போதுதான் என்னைப் பற்றி திட்டுவதை நிறுத்தியிருக்கிறார். பணம் சிக்கியதால் கதறுகிறார்கள். 40 தொகுதிகளில் ஒன்றில்கூட தி.மு.க வெற்றிபெறாது. வேலூரில் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. புதுவை உட்படத் 40 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணிதான் வெற்றிபெறும் என்று கள நிலவரம் சொல்கிறது. வேலூர் தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சிறுபான்மை சமூகத்துக்காக பா.ம.க-வும், நானும் என்னவெல்லாம் செய்திருக்கிறோம், போராடியிருக்கிறோம் என்று அந்த மக்களுக்குத் தெரியும். சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைவிட நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்’’ என்றார்.