`ஸ்டாலினின் தந்தையாலே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை' - பிரசாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு! | Even stalin father can't Destroy aiadmk says o.panneerselvam

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (07/04/2019)

கடைசி தொடர்பு:08:30 (07/04/2019)

`ஸ்டாலினின் தந்தையாலே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை' - பிரசாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு!

அ.தி.மு.க.வை ஸ்டாலின் அழிப்பேன் என்கிறார். ஸ்டாலினின் தந்தையாலே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

ஓ.பி.எஸ்


கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாகர்கோவில் மற்றும் தக்கலை பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "தமிழகத்தில்  தேர்தலுக்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் யாரும் இதுவரை செய்யாத  பல வளர்ச்சித்திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் வாக்ககாளர்களாகிய நீங்கள்  நீதிபதிகளாக இருந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உருப்படியான எந்த திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை.

ஓ.பி.எஸ்.

அவர்கள் கொண்டு வந்தது உருப்படியில்லாத சேது சமுத்திர திட்டம்தான். இந்த திட்டம்  தோல்விகரமான திட்டம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் வீம்புக்கு அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். இதற்காக நாற்பதாயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார்கள். இந்த தொகை கடலில் போடப்பட்டதாக கூறினார்கள். அது கடலில் போடப்பட்டதா, அல்லது யார் வீட்டில் போடப்பட்டது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். மக்களுக்கும் நன்கு தெரியும். பொதுவாழ்வில் இருப்பவர்கள்  தரமாக பேச வேண்டும். ஆனால்,  மு.க.ஸ்டாலின் தரமில்லாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க தேர்தலுக்கு பின்னர் காணாமல் போகும் என்று கூறுகிறார். யார் காணாமல் போவார்கள் என்பதை பார்க்கலாம்.  அ.தி.மு.க ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய ஆலமரம். இது தமிழ்நாடு  முழுவதும் கிளை பரப்பியுள்ளது. அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை சுனாமியோ, புயலோ, பூகம்பமோ அழிக்க முடியாது. அ.தி.மு.க.வை ஸ்டாலின் அழிப்பேன் என்கிறார். ஸ்டாலினின் தந்தையாலே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. ஸ்டாலினால் அது முடியாது" என்றார்.