`மோடி அல்ல, அவர் டாடியே வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை' - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன்! | ttv dinakaran slams bjp and aiadmk in kovilpatti campaign

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (07/04/2019)

கடைசி தொடர்பு:11:46 (07/04/2019)

`மோடி அல்ல, அவர் டாடியே வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை' - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன்!

“ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்து விட்டதால், இன்று இந்த அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டோம். அவர்கள் மோடியிடம் மண்டியிட்டு வணங்குகிறார்கள். மோடி இல்ல.., அவர் டாடியே வந்தாலும்  எங்களுக்குப் பயமில்லை” என அ.ம.மு.க., துணைப்பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கோவில்பட்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”ஸ்டெர்லைட் ஆலை, காவிரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம், நீட் தேர்வு என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தை புறக்கணிக்கின்றன. காரணம், இவர்களுக்குத் தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில்தான் இவர்களுக்குச் செல்வாக்கு உள்ளது. அதனால்தான், அந்த மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக்கூட புறக்கணிக்கின்றனர்.

பிரசாரம்

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என முந்தைய தேர்தலில் மோடியின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போனார்கள். மோடியின் சர்வாதிகார தன்மையால் பண மதிப்பிழப்பு அறிவித்த போது ஏழை மக்கள்தான் சாலையில் நின்றனர். ஆனால், பணக்காரர்கள் யாரும் சாலையில் நிற்கவில்லை. எம்.பி.,யாக இருந்த போது 2ஜி 3ஜி 4ஜி போன்ற வழக்குகளில் மாட்டியவர்கள் அமைச்சர் ஆனால் நிலைமை என்னாகும்? கடந்த 1996-ல் இருந்து 2014 வரை மத்தியில் ஏதாவது ஒரு கட்சியுடன் ஆட்சியில் இருந்து வந்தது தி.மு.க., ஆனால், தமிழகத்திற்கு எதுவும் செய்யாத காரணத்தினால்தான் 2011, 2016 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும்  தி,மு.க., தோற்றது.

தினகரன்

தேர்தல் சின்னம் கொடுக்க மறுத்த போதும் நாங்கள் தயங்கியது கிடையாது.  ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே., நகரில் டெபாசிட்டை காலி செய்தோம். திருவாரூரில் தேர்தலில் போட்டியிடப் பயந்து தி.மு.க., நீதிமன்ற வாசலில் நின்றது. இன்று கூட்டணிகளை காண்பித்து, சில தொலைக்காட்சிகளை கையில் வைத்துக் கொண்டு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.  துரோக கூட்டணி. நமது துர்ப்பாக்கியம் ஜெயலலிதா நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். இன்று இந்த அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டோம், அவர்கள் மோடியிடம் மண்டியிட்டு வணங்குகிறார்கள். மோடி இல்ல அவர் டாடியே வந்தாலும்  எங்களுக்குப் பயமில்லை.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க