சிந்திக்க வைத்த சிந்தனை கலை விழா - திறன்களை வெளிப்படுத்திய கோத்தகிரி அரசுப் பள்ளி மாணவர்கள்! | Nilgiris Govt School annual day celebration

வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (07/04/2019)

கடைசி தொடர்பு:13:29 (07/04/2019)

சிந்திக்க வைத்த சிந்தனை கலை விழா - திறன்களை வெளிப்படுத்திய கோத்தகிரி அரசுப் பள்ளி மாணவர்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  அமைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் மாணவர் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலைக்குச் சென்ற இந்த அரசு துவக்கப்பள்ளியில் தற்போது 70 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள், பழங்குடி மற்றும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளே முதல் தலைமுறையாக கல்வி பயில்கின்றனர்.

நீலகிரி

இந்த பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு ஓவியம், பேச்சு, பறை இசை, சிலம்பம், ஒயிலாட்டம் எனப் பல கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை தட்டிச் செல்கின்றனர். மாவட்டத்தில் நடைபெறும் கல்வி விழாக்கள், அரசு கலை விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த பள்ளி மாணவ மாணவிகளின் பங்களிப்பு இடம் பெறும். இந்த நிலையில் அவ்வூர் துவக்கப் பள்ளி ஆண்டு விழா ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. ’சிந்தனை கலை விழா’ என்ற பெயரில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசையுடன் ஊர்வலமாக வந்து பள்ளிக்கு பயன்படும் பொருட்களை  கல்வி சீர் வழங்கினர். பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் அங்கன்வாடி முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் நடனம்,நாடகம்,பேச்சு என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அனைத்து உயிரினங்கள் மீது அன்பு செலுத்தும் வகையில் மாணவர்கள் குரங்குகள் போன்று வேடம் அணிந்து சம காலத்தில் குரங்குகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர். குரங்குகளின் துயர் குறித்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு அனைவரும் நெகிழ்ந்தனர். இது குறித்து அவ்வூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி கூறுகையில்”  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே  மலை கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளி பலராலும் நன்கு அறியப்படப் பள்ளியாக உள்ளது.

பள்ளி மாணவர்கள்

தனியார் பள்ளிக்கு சவால் விடும் வகையில் நமது அரசுப் பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்து அனைத்து ஆசிரியர்களும் நேரம் பார்க்காமல் மாணவர்களின் நலனுக்காக உழைக்கின்றோம். மாணவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தர நாங்களும் எங்களைத் தினமும் புதுப்பித்துக் கொள்கிறோம். மனிதர்களால் குரங்குகள் வாழ்வியல் முறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றின் உணவு, பழக்கவழக்கங்கள் மாறுபட்டுள்ளது. சமூக விலங்காக வாழும் தன்மை கொண்ட குரங்குகளின் பிரச்னைகளை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களைப் பங்கேற்க செய்தோம்” என்றார்.