``1973-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்துப் பேச தயாரா?’’ - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் | Edappadi Palanisamy challanged MK Stalin in Pollachi

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (08/04/2019)

கடைசி தொடர்பு:08:28 (08/04/2019)

``1973-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்துப் பேச தயாரா?’’ - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

`1973-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்துப் பேச தயாரா?' என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக, முதல்வர் பழனிசாமி நேற்று வாக்கு சேகரித்தார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொள்ளாச்சி ஒரு புனித பூமி. ஆனால், இங்கு நடந்த  ஒரு சம்பவத்தை வைத்து தி.மு.க கேவலமாக அரசியல் செய்துவருகிறது. இந்தியாவிலேயே, சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான். அதனால்தான், தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இதில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் குற்றவாளிகளுடன் தி.மு.க மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் நெருங்கிப் பழகியுள்ளார். அதைப்பற்றியெல்லாம் பேசாமல், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தின்மீது ஸ்டாலின் வீண்பழி சுமத்திவருகிறார். ஜெயராமன் பற்றி பொள்ளாச்சி மக்களுக்கு நன்கு தெரியும்.

சமீபத்தில், கடசூலூரைச் சேர்ந்த ஒரு தி.மு.க நிர்வாகி, ரயிலில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிறை சென்றார். 1973-ம் ஆண்டு ஒரு  கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது. அந்தக் கல்லூரி, தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் அருகில்தான் உள்ளது. அந்தக் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது மாலை 7 - 8 கரன்ட் கட் ஆனது. அதன் பிறகு, என்ன நடந்தது என்று ஸ்டாலின் பேசுவாரா? முதல்வர் பதவியில் இருப்பதால், நான் கண்ணியத்தோடு பேசிவருகிறேன்” என்றார் ஆவேசமாக..!