``சின்னம் எங்க?" - கோவை பிரசாரத்தில் தாமரையைத் தேடிய எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy search lotus logo in Coimbatore Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (08/04/2019)

கடைசி தொடர்பு:08:15 (08/04/2019)

``சின்னம் எங்க?" - கோவை பிரசாரத்தில் தாமரையைத் தேடிய எடப்பாடி பழனிசாமி

கோவையில், பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாமரை சின்னத்தைத் தேடினார்.

சின்னம் - எடப்பாடி பழனிசாமி

கோவை நாடாளுமன்றத் தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் குனியமுத்தூர் போன்ற இடங்களில், தலையில் குல்லா மாட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். இதில் ஒரு பகுதியாக ராஜா சாலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, "தி.மு.க கூட்டணி கொள்கையில்லா கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணி. இன்றைக்கு வைகோ நினைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். யாராவது கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவார்களா. ம.தி.மு.க ஏன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. தனி சின்னத்தில் போட்டியிட வேண்டியதுதானே?" என்று பேசியவர், பிரசாரத்தை முடிக்கும் தறுவாயில், தாமரை  சின்னத்தை மக்களிடையே காட்டுவதற்காகக் கேட்டார், இதையடுத்து, அருகில் இருந்த வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சின்னத்தைத் தேடினார்.

ஆனால், அவர் தாமரை சின்னத்தைக் கொண்டு வராத காரணத்தால், தன் சட்டையில் மாட்டி வைத்திருந்த தாமரை சின்னத்தை எடுத்து முதல்வரிடம் கொடுத்தார். அதற்கு முதல்வரோ, "நீங்களே மக்களிடம் காட்டுங்கள்" என்றார். அதற்கு ஒரு 5 நிமிடம் முன்னர்தான், அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரும் தாமரைப் பூவை தேடி வண்டியைச் சுற்றியிருந்த பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்களிடம் யாரிடமும் தாமரை பூ இல்லாததால் அவர் கோபத்துடன் வலம் வந்தார்

கடைசியாக எடப்பாடி பழனிசாமி தொண்டாமுத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேடமிட்டு, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பேருந்துகள் வைத்து அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால், பழனிசாமி வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே போக்குவரத்து முடக்கியதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.