``அதானிக்கு 5,000 ஏக்கர் நிலம்; கீழடிக்கு..?’’ - பிரசாரத்தில் கேள்வி எழுப்பிய சீமான் | 5,000 acres of land to adanil; 2 acres of land not given for keelzhadi, says Seeman

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (08/04/2019)

கடைசி தொடர்பு:08:29 (08/04/2019)

``அதானிக்கு 5,000 ஏக்கர் நிலம்; கீழடிக்கு..?’’ - பிரசாரத்தில் கேள்வி எழுப்பிய சீமான்

``அதானிக்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுத்துக் கொடுத்தவர்கள், தமிழரின் நாகரிகத்தைக் கண்டறிய உதவும் கீழடி ஆய்வுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கவில்லை. இவர்கள் கைகளில் ஏன் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்" என சீமான் கேள்வி எழுப்பினார். 

நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் புவனேஸ்வரி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஹேமலதா ஆகியோரை ஆதரித்து, ராமநாதபுரம் அரண்மனை முன் பிரசாரக் கூட்டம் நடந்தது. தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு உரையாற்றிய சீமான், ''கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான் எனக் கூறும் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுடன் கொள்கைகள் இல்லாமல் கோடிகளை மட்டுமே நம்பி கூட்டணி அமைத்துள்ளன தி.மு.க-வும்  அ.தி.மு.க-வும், இவர்கள் அமைத்துள்ளது கோடிகளைக் குறியாகக்கொண்ட கூட்டணி. சீட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட சீட்டணி. இவர்கள் அமைத்துள்ள கூட்டணி நாட்டைப் பிடித்துள்ள சனி.

மக்களைச் சாதியாகவும், மதமாகவும் பிரிக்க நினைப்பவர்களுக்கு மாற்றாக மக்களை ஒன்றிணைக்கக்கூடிய இயக்கமாக உருவானதுதான் நாம் தமிழர். உண்ணும் உணவுக்குக்கூட ஜி.எஸ்.டி உண்டு. அதானியின் மின்சாரத்திற்கும், அம்பானியின் பெட்ரோலுக்கும் மட்டும் ஜி.எஸ்.டி இல்லையாம். ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதன்மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டும் பி.ஜே.பி அரசு, மாட்டுக்கறி சாப்பிடும் உள்ளூர் மக்களை அடித்துக் கொல்கிறது.  கற்கால மனிதர்களைப் போல தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு, ஒரு குவளை குடிநீருக்காக ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அலைகிறார்கள். மக்களின் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கவேண்டியவர்கள், அதானியின் சோலார் பேணல்களை சுத்தப்படுத்த தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதி கொடுத்துள்ளார்கள். அதானி மின்சாரம் தயாரிக்க 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொடுத்த ஜெயலலிதா, தமிழர்களின் நாகரிகத்தைக் கண்டறிய உதவும் கீழடி ஆய்வுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கவில்லை.  

கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளும் - காங்கிரஸும் வலுவாக இருப்பதால், ஐயப்பன் மூலம் நுழையப் பார்க்கிறது பா.ஜ.க.  தமிழகத்தில் கால் பதிக்க  5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத் தொகுதிகளில் சாதி, மத உணர்வுகள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி வெற்றிபெறத் திட்டமிடுகின்றனர். இவர்களின் கைகளில் மீண்டும் ஆட்சியைக் கொடுக்க பைத்தியக்காரர்கள்கூட துணிய மாட்டார்கள். எனவே, என்ன விலை கொடுத்தும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்போம்'' என்றார். 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கண்.இளங்கோ, டொமினிக் ரவி, வெங்குளம் ராஜு, அறிவுச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.