`மத்தியில் மோடி ஆட்சி; மத்திய அமைச்சர் தமிழிசை!’ – பிரசாரத்தில் பிரேமலதா ஓப்பன் டாக் | if modi is primeminister thamilisai is a cabinet minister says premalatha

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (08/04/2019)

கடைசி தொடர்பு:09:15 (08/04/2019)

`மத்தியில் மோடி ஆட்சி; மத்திய அமைச்சர் தமிழிசை!’ – பிரசாரத்தில் பிரேமலதா ஓப்பன் டாக்

``மத்தியில் மோடி ஆட்சிதான் அமையப்போகிறது. இங்கு தமிழிசை வெற்றிபெற்றால் கண்டிப்பாக மத்திய அமைச்சராவார். அப்போது, தொகுதிக்குத் தேவையான வாய்புகளைப் பெற்றுத்தருவார். மத்திய அமைச்சர் வேண்டுமா அல்லது வெறும் எம்.பி வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்” என்று பிரேமலதா பிரசாரம் செய்தார்.

பிரேமலதா

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, கோவில்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்கள் இருவருமே பெண்கள். இருவருமே அரசியல் பின்புலம் கொண்டவர்கள். எங்களது கூட்டணி தமிழக மக்களால் வரவேற்கப்பட்ட கூட்டணி. 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம். எதிர் கூட்டணியில் உள்ளவர்களின் பிரதமர் வேட்பாளர் யாரென்று கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கருத்துக்கணிப்புகளைப் பார்த்து யாரும் குழம்ப வேண்டாம். தொலைக்காட்சிகளில் கருத்துகணிப்பு என வருவதெல்லாம் உண்மை அல்ல. கருத்துக்கணிப்பு என்ற பெயரில், கருத்து திணிப்பு செய்து மக்களை குழப்பிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

தமிழ்... தமிழ் எனச் சொல்லி, ஒரு இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்பதை மக்கள் யாரும் மறக்கவில்லை. தமிழுக்கு யார் துரோகம் செய்தார்களோ, அவர்களுக்கு மக்கள் நிச்சயமாகத் துணைநிற்க மாட்டார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வரக் காரணமே தி.மு.க தான். அதனைத் தடுத்தது அ.தி.மு.க. அதேபோல, கெயில், நியூட்ரினோ என நாட்டுக்குத் தேவையில்லாத அனைத்தையும் கொண்டுவந்தது தி.மு.க தான். நாட்டுக்குத் தேவையில்லாததைக் கொண்டுவந்தது தி.மு.க. நாட்டுக்கு தேவையானவற்றைக் கொண்டுவந்தது அ.தி.மு.க, பா.ஜ.க,” என்றவர்,

பிரேமலதா

“உங்கள் வாக்கு உள்ளூர்காரருக்கா அல்லது வெளியூர்காரருக்கா. அசலுக்கா அல்லது நகலுக்கா. 50 ஆண்டுகால ஆட்சி, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தும் ஒன்றும் செய்யாதவருக்கு உங்கள் வாக்கா அல்லது முதல் முறையாகப் போட்டியிடும் மக்களுக்காக உழைப்பவருக்கா. தமிழின படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்களோடு விருந்து உண்டவருக்கா இல்லை, தனது பெயரிலேயே தமிழை வைத்துள்ள தமிழிசைக்கா. நமது நாட்டைப் பாதுகாப்பவர் வேண்டுமா அல்லது நமது நாட்டை விற்பனை செய்பவர் வேண்டுமா” எனத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கேள்விகளை எழுப்பினார்.

இறுதியாக, “கனிமொழி என்றாலே 2ஜி ஊழல்தான் சட்டென்று அனைவரது நினைவுக்கும் வரும். மத்தியில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வரப்போவதால், இங்கு தமிழிசை சௌந்தரராஜன் வெற்றிபெற்றால், கண்டிப்பாக மத்திய அமைச்சராவார். அப்போது, இந்தத் தொகுதிக்குவேண்டிய அனைத்து வாய்ப்புகளையும் நிச்சயமாக பெற்றுத்தருவார். ஆனால், வெற்றி பெறாத ஒருவருக்கு நீங்கள் வாக்களித்தால், டெல்லிக்கு வெறும் எம்.பி-யாகத்தான் போக முடியும். அதனால், எந்தப் பலனுமில்லை. அதனால் மத்திய அமைச்சர் வேண்டுமா... வெறும் எம்.பி வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க