`எந்த ஆவி கிடைத்தாலும் இட்லி சுடும் சமையல்காரர்கள் இவர்கள்!’ - அ.தி.மு.க-வை கலாய்த்த கமல் | Kamal campaign in covai

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (08/04/2019)

கடைசி தொடர்பு:10:44 (08/04/2019)

`எந்த ஆவி கிடைத்தாலும் இட்லி சுடும் சமையல்காரர்கள் இவர்கள்!’ - அ.தி.மு.க-வை கலாய்த்த கமல்

``எந்த ஆவி கிடைத்தாலும் இவர்கள் இட்லி சுட்டுவிடுவார்கள். அந்த மாதிரி சமையல்காரர்கள் இவர்கள்" என்று, கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கோவை வேட்பாளர் மகேந்திரன் கமல் பிரசாரம்

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளரான டாக்டர் மகேந்திரனை ஆதரித்து, கோவை சிங்காநல்லூரில் கமல்ஹாசன் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது, " நான் சிங்காநல்லூரில் சில மாதங்கள் தங்கியிருக்கிறேன். ஆனால்,  அப்போது உங்கள் பொழுதுபோக்குக்காக வந்தேன். இப்போது, நம் எதிர்காலத்திற்காக வந்திருக்கிறேன்.  என்னை  நான்கு வயது பிள்ளையிலிருந்து  60 வருஷமாக தோளில் தூக்கிவெச்சு கொஞ்சிகிட்டு இருக்கீங்க. அதற்குக்  கைமாறு, கலையாக இருந்தால் மட்டும் போதாது. எஞ்சிய என் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிப்பதுதான் அதற்கான கைமாறாகப் பார்க்கிறேன்.

அதற்காகத்தான் இந்தப் பணியில் இறங்கியிருக்கிறேன். உங்கள் குறைகளையெல்லாம் பட்டியலிட்டு நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அதைக் கொண்டுபோய் இவர்கள் டெல்லியில் குரலெழுப்பப்போகிறார்கள். முதல்ல இவர்கள் போகட்டும். அப்புறம் நான் வர்றேன். இவர் உங்கள் வேட்பாளர். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர், டாக்டர். மகேந்திரன். இவர், மாற்றத்தின் வேட்பாளர். அவருடைய முகத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் என் சாயல் தெரியும். நான், அறிமுகப்படுத்தியுள்ள எல்லாமே என் சாயல் உள்ள முகங்கள். என் சாயல் உள்ள மனங்கள். இந்தக் குடும்பத்தில் யாரும் சற்றே குறைவாக வேலைசெய்தாலும் கண்டிக்கவேண்டிய கடமை என்னுடையது. அதை ஏற்கவேண்டிய கடமையும் எங்களுடையது.

மக்கள் நீதி மய்யம் கோவை வேட்பாளர் மகேந்திரன் கமல் பிரசாரம்

இங்கே, தலைவர்களைத் தேடாதீர்கள். நீங்கள்தான் தலைவர்கள்...  அதை மறந்துவிடாதீர்கள். அதை மறந்தால், நீங்கள் அடிமைகளாக வாழ வேண்டிவரும். உங்கள் குடிநீரிலும் சாக்கடை கலக்கும். உங்கள் வாழ்க்கையிலும் அரசியல்வாதி வேடமிட்டு சில சாக்கடைப் பெரியோர்கள் வந்து சங்கமிப்பார்கள். பொறுத்ததுபோதும். பொங்கி எழுங்கள். பல ஊர்களில் இரு தரப்பினரையும் நுழையவிடுவதில்லை. இதை நீங்கள் பார்க்கிறீர்களா? எவ்வளவு இருட்டடிப்பு செய்தாலும் எப்படியாவது அவைகள் உங்களை வந்து சேர்ந்துவிடுகிறது. எங்கள் புகழும் அப்படித்தான் உங்களை வந்துசேர்கிறது. இளைஞர்கள் பலரும் எதிர்க்கட்சியிலிருந்து மனத்தளவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் நீதி மய்யத்திற்கு வருகிறார்கள். இது, எதிரணியினருக்கும் புரிகிறது. எப்படி எப்படியோ திட்டித்திட்டி பார்க்கிறார்கள் அவர்கள் திட்டத்திட்ட,  ஆசீர்வாதமாக மாறி எங்களுக்குப் புகழ் கூடுகிறது. 

நம் வீட்டுப் பெண்கள் வயது வரம்பில்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அதற்கு இன்றுவரை, `மன்னிக்க வேண்டும்... அவமானப்படுகிறோம் எங்கள் ஆட்சியில் இது நடந்துவிட்டது' என்று முதல்வர் சொல்லவே இல்லை. நேர்மையானவன் அதைச் சொல்வான். பாலியல் வன்கொடுமைக் குற்றத்திற்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் ஏசுகிறார்கள். எத்தகைய பெண்ணிடமிருந்து கற்பைப் பறித்தாலும் அது தண்டனைக்குறியது.  தமிழ்த்தாய் பெண்ணல்லவா... தமிழகம் பெண்ணல்லவா... நம் தாய் மீது கை வைக்கத் துணிந்த இவர்களுக்கு என்ன தண்டனை என்பதைப் பிற்பாடு முடிவு செய்துகொள்ளலாம்; முதலில் இவர்களை கோட்டையிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கான ஆரம்ப அடிக்கல்லை நீங்கள் நாட்ட வேண்டும். 

மக்கள் நீதி மய்யம் கோவை வேட்பாளர் மகேந்திரன் கமல் பிரசாரம்

டெல்லியில் போய் அய்யா எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் எம்.பி-க்களாக இவர்கள் போகக் கூடாது.  நுனி நாற்காலியில் அமர்ந்து பம்மிக்கொண்டு பேசும் எம்.பி-க்கள் போகக் கூடாது. நிமிர்ந்து நின்று கொடுக்கவேண்டிய மரியாதையை பிரதமருக்குக் கொடுத்துவிட்டு,  உங்களுக்குச் சேரவேண்டியதைக் கொண்டுவந்து சேர்க்கும் எம்.பி-க்களைத் தேர்வுசெய்து அனுப்புங்கள். தமிழர்கள்மீது எதைத் திணித்தாலும் தின்றுவிட்டு சும்மா இருக்கும் ஆட்கள் அல்ல. அது மொழியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும், எங்களுக்கு எது பிடிக்கிறதோ அவையெல்லாம் எங்களுக்கு வேண்டும்தான். 

எந்த ஆவி கிடைச்சாலும் இவர்கள் இட்லி சுட்டுவிடுவார்கள். அந்த மாதிரி சமையல்காரர்கள். இவர்கள் என்னைப் பார்த்துச் சொல்கிறார்கள், கோவைக்குத் தேவையான திட்டங்கள் என்னென்ன, அவற்றை எந்தக் காலகட்டத்திற்குள் முடித்துக்கொடுப்போம் என்பதை அட்டவணை போட்டு சொல்லக்கூடிய வேட்பாளர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன். மாற்றம் வேண்டுமென்றால், அவருக்கு வாக்களியுங்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க