" 'குறளின் இலக்கணம்' சிலம்பொலி செல்லப்பன்!" - க.அன்பழகன் பெருமிதம் | Anbhazhagan recalls memories about SIlamboli CHellappan

வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (08/04/2019)

கடைசி தொடர்பு:11:56 (08/04/2019)

" 'குறளின் இலக்கணம்' சிலம்பொலி செல்லப்பன்!" - க.அன்பழகன் பெருமிதம்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார். அவருக்கு வயது 90.நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928 ,செப்டம்பர்  24-ல் பிறந்தவர் செல்லப்பன். சுப்பராயன் - பழனியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். எம்.ஏ தமிழ் படித்துவிட்டு, கணித ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதைப் பெற்றார்.

மிழுக்கு 90 வயது வரை உழைத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல்நலக் குறைவால் காலமானார். நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928, செப்டம்பர் 24-ல் பிறந்தவர் செல்லப்பன். சுப்பராயன் - பழனியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். எம்.ஏ தமிழ் படித்துவிட்டு கணித ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர், 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதைப் பெற்றார்.

சிலம்பொலி செல்லப்பன்

 

1953-ம் ஆண்டு ராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை தலைமையில், 'சிலப்பதிகாரம்' என்ற தலைப்பில் செல்லப்பன் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த அவர், `சிலம்பொலி’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினார். அப்போதிலிருந்து சிலம்பொலிக்கும் திருப்பணியைத் தொடர்ந்து செய்துவந்தார். 'சிலம்பொலி அணிந்துரைகள்' என்ற இவருடைய நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்று, பின்னர் சிலப்பதிகார அறக்கட்டளையைத் தொடங்கியவர்.

1975-ம் ஆண்டு 'சிலப்பாதிகாரம்' பற்றிய முழுமையான ஆய்வு நூலை எழுதி, 'சிலம்பொலி' என்ற தலைப்பில் வெளியிட்டார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, சிலம்பொலி நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில், `கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. இதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழ்த்துகள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும் எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன' எனவும் குறிப்பிட்டார். திருச்செங்கோடு நகரில் உள்ள பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்கு, `கண்ணகி விழா’ என இலக்கிய அங்கம் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர் சிலம்பொலி செல்லப்பன்தான்.

மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில் மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அடியொற்றி அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றத்தில், 'மணிமேகலை' என்ற தலைப்பில் 18 பொழிவுகள் 18 மாதங்கள் என்ற அளவில் மிகச் சிறந்த தொடர் சொற்பொழிவாற்றியதோடு, எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதி கருத்தரங்குகளிலும், இதழ்களிலும் படைத்துள்ளார். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தின் தலைப்பில், வட சென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓர் ஆண்டுக்காலம் 15 பொழிவுகளாகத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியதோடு, இக்காப்பியத்தின் சிறப்பைப் பரப்ப அயராது பாடுபட்டு வருகிறார்.

1990-ம் ஆண்டு வட சென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு நூல்களையும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 பொழிவுகளில் தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி சாதனை படைத்தார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சுகளைத் தொகுத்து, 'சங்க இலக்கியத்தேன்' என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'சங்க இலக்கியங்கள் பற்றிய இவருடைய பணி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது' என முத்தமிழ் அறிஞரும் மறைந்த முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்குப் பேராசிரியர் க.அன்பழகன் அளித்துள்ள ஆய்வுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "இந்த நூலை முற்றும் படித்துச் சுவைத்த நான் சிலம்பொலியாரின் தேமதுர நயம் காட்டும் உரையை அவர் நிகழ்த்திக் கேட்பதுபோலவே உணர்ந்து மகிழ்ந்தேன். சுருங்கச் சொல்வதெனில், இவ்விரிவுரை ஒவ்வொன்றும், கொற்கை வெண்முத்துகளைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டிவைத்துப் பரிசளித்தது போன்றும் இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித் தட்டில் நிரப்பி உண்ணத் தந்தது போன்றும் உளம் மகிழ்வித்தது. இதை நானே, பல கல் தொலைவு பயணம் செய்து மேடையேறி உறையாற்ற முற்படும் புலவனுக்கு நறுமண முல்லையால் தொடுத்ததொரு மலை அணிவித்தது போன்றும், கடுங்கோடையின் வெப்பத்தால் களைப்புற்ற ஒருவனுக்கு குளிர் இளநீரில் நுங்கினைப் பெய்து வைத்துத் தேனும் கலந்து பருகிடத் தந்தது போன்றும் உணர்ந்தேன்; உவகையுற்றேன். சிலம்பொலி செல்லப்பன் சொலல் வலன், சோர்விலன், அஞ்சான் என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். உலகம் பொதுமறையாம் திருக்குறள் எக்காலத்துக்கும் எவ்விடத்துக்கும் எவருக்கும் பொதுவாக, பொருத்தமாக இருக்கிறது என்ற கருத்தை மேடைகள் பலவற்றில் முழங்கியுள்ளார்'' என்று சிலம்பொலி செல்லப்பனாரைப் புகழ்கிறார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர் பதவிகளை அவர் வகித்துள்ளார். சிலப்பதிகாரம் என்றாலே இரண்டு சான்றோர்கள் பெயர், உடனே அனைவரின் நினைவுக்கு வரும். ஒருவர், சிலப்புச் செல்வர் ம.பொ.சி. அடுத்தவர், சிலம்பொலி செல்லப்பன். கடந்த 60 ஆண்டுகளாகச் சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டு பரப்பி வந்தவர் சிலம்பொலி செல்லப்பன். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்பட பல நூல்களை எழுதியவர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நாலடியார் மூலத்துக்கு இவர் எழுதியுள்ள விளக்கவுரை தமிழார்வலர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.செம்மொழி எண்பேராயக் குழுவில் உறுப்பினராய்ப் பணியாற்றியுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்க் குழுவின் துணைத் தலைவராய்ப் பணியாற்றி , மலர் மிகச் சிறப்பாக அமைவதற்கு அயராது அல்லும்பகலும் உழைத்தார். அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, மலர்க் குழுத் தலைவர் பேராசிரியர் அன்பழகனார் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பாராட்டைப் பெற்றார். வானொலியிலும், தொலைக்காட்சியிலும், திருக்குறள் , சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாணி, பத்துப்பாட்டு , எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு முதலான சங்க இலக்கிய நூல்கள் பற்றி எண்ணற்ற உரைகள் நிகழத்திச் செம்மொழி பரப்பிட உழைத்தவர்.

உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6.4.2019 அன்று சென்னையில் காலமானார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும்,தொல்காப்பியன், கொங்குவேள் என்ற இரண்டு மகன்களும், மணிமேகலை, கெளதமி, நகைமுத்து என்ற மூன்று மகள்களும் உள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்