`இப்படி ஏம்மா நடந்துகொள்கிறாய்' - 16 வயது மகளின் உயிரைப்பறித்த தாயின் தவறான பழக்கம் | 16 years girl suicide in viluppuram

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:11:00 (08/04/2019)

`இப்படி ஏம்மா நடந்துகொள்கிறாய்' - 16 வயது மகளின் உயிரைப்பறித்த தாயின் தவறான பழக்கம்

தாயின் தவறான பழக்கத்தைக் கண்டித்துள்ளார் மகள். இதனால் ஆத்திரம் அடைந்த தாய், மகளை கடுமையாகத் திட்டியுள்ளார்.  மனவேதனையடைந்த மகள், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்- கவிதாதேவி (41) தம்பதிக்கு சரிதா (16), சுபாஷினி (16), மல்லிகா (10) (பெயர்கள் மாற்றம்) என 3 மகள்கள். இவர்கள், அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்துவருகின்றனர். உடல்நிலை சரியில்லாமல் வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, தனது மகள்களுடன் தனியாக வசித்துவந்திருக்கிறார் கவிதா தேவி. அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிராம உதவியாளர் ராஜேந்திரன் (எ) ரமணா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இவர்கள்  சந்தித்து வந்திருக்கின்றனர்.

சம்பவம் நடந்த அன்று மகள்கள் வீட்டில் இல்லாததால், ராஜேந்திரனை வீட்டுக்கு அழைத்துள்ளார் கவிதா. அப்போது வெளியே சென்று வீடு திரும்பிய சுபாஷினி, தனது தாய் வேறு ஒரு ஆணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார். ராஜேந்திரன் வெளியேறும் வரை அமைதியாக அழுதுகொண்டிருந்த சுபாஷினி, அதன்பிறகு `இப்படி ஏம்மா நடந்துக்கிறே' என தாயைக் கண்டித்திருக்கிறார். அப்போது, தனது மகளைக் கடுமையாகத் திட்டிய கவிதாதேவி, ராஜேந்திரனுக்கு தொலைபேசி மூலம் இதுகுறித்துக் கூறியிருக்கிறார். அதனால், வெளியே சென்ற ராஜேந்திரன் மீண்டும் வந்து, சுபாஷினியை அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த சுபாஷினி, வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்துவிட்டு மயங்கியிருக்கிறார்.

அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுபாஷினியின் தாத்தா முத்துசாமி என்பவர், கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

கைது

அந்தப் புகாரில், ”கவிதா தேவி திட்டியதாலும், ராஜேந்திரன் தாக்கியதாலும்தான் நான் தற்கொலை முடிவுக்கு வந்தேன் என்று என் பேத்தி சுபாஷினி என்னிடம் தெரிவித்தாள். அதனால், அவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கவிதா தேவி மற்றும் ராஜேந்திரன் இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க