இரவோடு இரவாக பெரியார் சிலை உடைப்பு! அறந்தாங்கியில் வலுக்கும் போராட்டம் | Periyar statue breaks by unknown persons

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (08/04/2019)

கடைசி தொடர்பு:11:32 (08/04/2019)

இரவோடு இரவாக பெரியார் சிலை உடைப்பு! அறந்தாங்கியில் வலுக்கும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையின் தலை, இரவோடு இரவாக மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவம், அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடைக்கப்பட்ட பெரியார் சிலை

அறந்தாங்கி  அரசு மருத்துவமனைக்கு அருகே, பெரியாரின் முழு உருவச்சிலை கடந்த 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை தி.க தலைவர் வீரமணி திறந்துவைத்தார். அந்தப் பகுதியின் பிரதான அடையாளமாகத் திகழும் பெரியார் சிலைக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். இதேபோல, தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் காலங்களில் பிரசாரம் செய்ய வரும் தலைவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுதான் பிரசாரத்தைத் தொடங்குவார்கள். தற்போது, தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் அறந்தாங்கி பகுதியில் தீவிர பிரசாரம் செய்துவருகின்றனர். இந்த நிலையில்தான், பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று, இரவோடு இரவாக உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

உடைந்து கிடக்கும் சிலை

சிலை உடைக்கப்பட்டதைக் கண்ட பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து அறிந்த தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஏராளமானோர் சிலை அருகே திரண்டனர். தொடர்ந்து, புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ்,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்திவருகிறார். அங்கு திரண்ட தி.மு.க, தி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சிலையைச் சேதப்படுத்தியவர்களை உடனே கைதுசெய்யக் கோரி, அறந்தாங்கி - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தி.ம.வினர் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சிலையை சேதப்படுத்தியர்வர்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து, அங்கிருந்து கலைந்தனர். இதனால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு  முன், ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் இருந்த பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அறந்தாங்கியில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.