`வரலைன்னா திட்டுறீங்க, வந்தா விரட்டுறீங்க!'- கிராம மக்களிடம் கடுகடுத்த தம்பிதுரை | thambidurai upset during his campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (08/04/2019)

கடைசி தொடர்பு:12:10 (08/04/2019)

`வரலைன்னா திட்டுறீங்க, வந்தா விரட்டுறீங்க!'- கிராம மக்களிடம் கடுகடுத்த தம்பிதுரை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில், ஓட்டு கேட்டுச் சென்ற தம்பிதுரையை தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, சூழ்ந்துகொண்டு மக்கள் கேள்வி கேட்க, நொந்துபோன தம்பிதுரை, 'உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும்' என்று கூறிவிட்டு மக்களிடம் தனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்காமலேயே திரும்பிச்சென்றனர். 

தம்பிதுரை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைப் பகுதியில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தொகுதி மக்களைச் சந்தித்து குறைதீர்க்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  அப்போது, அப்பகுதி மக்கள், "இரண்டு முறை எம்.பி-யாக இருந்த நீங்கள், எங்கள் ஊராட்சிக்கு என்ன செய்தீர்கள்" என்று கேட்க, வரலைன்னா திட்டுறீங்க, வந்தா விரட்டி அடிக்கிறீங்க, என்னதான் நான் செய்ய வேண்டும் என்று கூறி மக்களிடம் தம்பிதுரை கடுகடுத்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.

தம்பிதுரையுடன் வாக்குவாதம்

தம்பிதுரையுடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை ஆட்சித்தலைவர் ஆகியோர் உடன் சென்றனர்.
அந்த வீடியோவில், தம்பிதுரையை அந்தப் பகுதி மக்கள் சூழ்ந்துகொண்டு, தங்களது ஊராட்சியில், தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எதுவும் தீர்த்துவைக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். அப்போது, அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் தம்பிதுரையிடம், கேள்வி எழுப்புகிறார். 'இரண்டு முறை எம்.பி-யாக இருந்திருக்கிறீர்கள். எங்கள் ஊராட்சிக்கு என்ன திட்டங்களைக் கொண்டுவந்தீர்கள்' என்று கேட்க அதற்கு, "அதை அரசுதான் செய்ய வேண்டும். நான் செய்ய முடியாது. என்னிடம் நிதி இல்லை. ஆட்சித்தலைவர், அரசு அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கூறுங்கள்'' என்று தம்பிதுரை கூற, விடாத அந்த  இளைஞர், உங்களை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

பொதுமக்களிடம் பேசும் தம்பிதுரை

நீங்கள்தான் அரசாங்கத்திடம் பேசி நிதியைக் கேட்டு வாங்கித்தர வேண்டும் என்று கூற, கடுகடுத்த தம்பிதுரை,  ''நான் ஒட்டு கேட்டு வரவில்லை, உங்கள் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்காகத்தானே நாங்கள் வந்திருக்கிறோம். வரலைன்னா ஏன் வரலைன்னு திட்டுறீங்க, வந்தால் விரட்டி அடிக்கிறீங்க. இப்போதுதான் வந்தியா, 4 வருஷம் கழித்து வந்தியான்னு கேட்டா நான் என்ன செய்வேன். கொடுமுடி ஆரம்பித்து புதுக்கோட்டை முழுசும் தொகுதி. 20 ஆயிரம் கிராமங்கள் இருக்கு. ஒரு கிராமத்திற்கு ஒருமுறை வந்தால், மீண்டும் 5 வருஷத்துக்குப் பிறகுதான் வரமுடியும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

தம்பிதுரையிடம் இளைஞர் கேள்வி கேட்கும்போது, அந்த இளைஞரின் கன்னத்தைத் தடவும் விஜயபாஸ்கர், அவர் காதுக்கு அருகே சென்று, `அவரும்  நிறையச் செய்துள்ளார். தொகுதிக்குப் பல்வேறு வசதிகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது' என்றார். அதற்கு, பதில் கூறிய அந்த இளைஞர், எம்.எல்.ஏ நிதியில் இருந்து ஓரளவு செய்திருக்கிறீர்கள்.

வாலிபரின் கன்னத்தில் தட்டும் விஜயபாஸ்கர்

ஆனால், எம்.பி நிதியில் இருந்து எங்களுக்கு எதுவும் வரவில்லை'' என்று கூற, சிறிது நேரத்தில் நமக்கு எதுக்குடா வம்பு என்று விஜயபாஸ்கர் கூட்டத்தை விட்டு நழுவிவிட்டார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.